மேட்டூர் காவிரியில் ஆயிரக்கணக்கானோர்  புனித நீராடல்!

பிரசித்தி பெற்ற மேட்டூர் அணை முனியப்பன் கோவிலில் சாமி கும்பிட்டு வகை வகையான மீன் உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். 
மேட்டூர் காவிரியில் ஆயிரக்கணக்கானோர்  புனித நீராடல்!

பிரசித்தி பெற்ற மேட்டூர் அணை முனியப்பன் கோவிலில் சாமி கும்பிட்டு வகை வகையான மீன் உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். 

மேட்டூரில் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக  நடந்து வருகிறது. ஆடிப்பெருக்கு என்பதால் மேட்டூர் காவிரியில் புனித நீராட சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் மேட்டூர் வந்து காவிரியில் புனித நீராடினர். இன்று அதிகாலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூருக்கு வரத் தொடங்கினார்கள்.

மேட்டூர் அருகே உள்ள ஓமலூர், மேச்சேரி, நங்கவள்ளி , ஜலகண்டபுரம், தாரமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் தங்களின் குலதெய்வங்களை தலைச் சுமையாக தூக்கி வந்து காவிரியில் புனித நீராட்டினார்கள். அதேபோல கோவில்களில் பயன்படுத்தும் ஆயுதங்களையும் கொண்டு வந்து ஆற்றில்  கழுவிச் சென்றனர். 

புதுமண தம்பதியினர் ஏராளமானோர் காவிரியில் குளித்து விட்டு, படிக்கறையில் படையலிட்டு தாலி பிரித்து அணிந்து சென்றனர். மேலும்  திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடைபெறுவதற்காகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பெறுவதற்காகவும் காவிரி ஆற்றில்  நீராடிச் சென்றனர்.

ஆற்றில் புனித நீராடிய மக்கள் மேட்டூர் அணையின்  வலது கரையில்  காவிரி ஆற்றையொட்டி   அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் ஆடு, கோழி பலியிட்டுப் பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னர் அருகே உள்ள கடைகளில் மீன்களை சாப்பிட்டு சென்றனர். பொதுமக்களுக்காக முனியப்பன் கோவில் அருகே ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இங்கு மேட்டூர் அணையில் பிடிக்கப்பட்ட ரோகு, கட்லா, விரால், கொக்கு மீன் , பாறை மீன், நண்டு என வகை வகையான வருத்த மற்றும் குழம்பு மீன்களை  ருசித்துச் சென்றனர். 

இதுகுறித்து  மேட்டூரில்  நீராட வந்த மக்கள் கூறும்போது,  மேட்டூர் என்றாலே மீன் தான் ஞாபகம் வரும்.  அதன்படி காவிரியில் நீராடி விட்டு, முனியப்பனை கும்பிட்டு மீன் சாப்பிட்டோம். அணைப்பகுதியில் பிடிக்கப்பட்ட புதிய மீன்கள் என்பதால் மிகவும்  சுவையாக இருந்தது என தெரிவித்தனர்.

அதேபோல மீன் கடை வியாபாரிகளும் , மக்களின் வருகையை  எதிர்பார்த்து பல்வேறு வகையான மீன்களை பொரித்தும், குழம்பு செய்தும் வைத்திருக்கிறோம் என்ற அவர்கள், இன்று அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் ஏராளமான மீன்களை வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

இதனிடையே குளிக்க வரும் மக்கள் பாதுகாப்போடு குளிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆழமான பகுதிகளுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காகவும் தீயணைப்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர் படகுகளுடன்  தொடர்ந்து ஆற்றுப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். 

மேட்டூர் பகுதியில் மட்டம், அணைக்கட்டு , காவேரி பாலம் என ஏழு இடங்களில் நீராட அனுமதித்துள்ளனர். மக்கள் கூட்டம் அதிக அளவில்  வருவதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மேலும் மேட்டூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com