ஆடி அமாவாசை: திருச்சி காவிரியில் வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சி அம்மாமண்டபம் காவிரியாற்று படித்துறைகளில் புதன்கிழமை பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
திருச்சி அம்மாமண்டபம் காவிரியாற்று படித்துறைகளில் வழிபாடு
திருச்சி அம்மாமண்டபம் காவிரியாற்று படித்துறைகளில் வழிபாடு

திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சி அம்மாமண்டபம் காவிரியாற்று படித்துறைகளில் புதன்கிழமை பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு  நீர்நிலைகளில் தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பதும், நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடையும் என்பது ஐதீகம்.

இதன்படி, நடப்பு ஆண்டு ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை அதிகாலையிலேயே தர்ப்பணம் கொடுப்பதற்காக திருவரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள காவிரியாற்றில் ஏராளமானோர் குவிந்தனர். மறைந்த தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் விதமாக காவிரியாற்றில் நீராடினர். தர்ப்பணம் கொடுத்த பின்னர், அம்மாமண்டபம் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்துவிட்டு சென்றனர். இதன் காரணமாக அம்மா மண்டபம் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் வந்திருந்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் நகரப் பகுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டு அம்மா மண்டபத்துக்கு நடந்து செல்ல போலீஸார் அறிவுறுத்தினர்.

மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகராட்சி சார்பில், காவிரியில் சேர்ந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் துப்பரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேபோல, கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, ஓயாமாரி காவிரி கரையோரப் பகுதி, முத்தரசநல்லூர், பெருகமணி, திருப்பராய்த்துறை, பெட்டைவாய்த்தலை உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் அந்தந்த கிராமங்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com