மின் மீட்டர்கள் தட்டுப்பாடு: நுகர்வோர் பாதிப்பு!

தமிழகத்தில் பழுதான மின் மீட்டர்களை மாற்றுவதற்கு ஆகும் காலதாமதத்தால், மின் நுகர்வோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
மின் மீட்டர்கள் தட்டுப்பாடு: நுகர்வோர் பாதிப்பு!

தமிழகத்தில் பழுதான மின் மீட்டர்களை மாற்றுவதற்கு ஆகும் காலதாமதத்தால், மின் நுகர்வோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தில் சாதாரண மின் மீட்டர்களுக்கு பதிலாக டிஜிட்டல் மீட்டர்கள் மாற்றும் பணிகள் முழுமையடையவில்லை.
 மின் மீட்டர்கள் தட்டுப்பாடு: பழுதான மின் மீட்டர்களுக்குப் பதிலாக புதிய மின் மீட்டர்களை மாற்றுவதற்காகவும் புதிய, தற்காலிக மின் இணைப்பு கோரியும் கடந்த 6 மாதங்களாக நுகர்வோர் காத்திருக்கின்றனர்.
 சிறிய மாவட்டங்களில் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோரும், பெரிய மாவட்டங்களில் 10,000-க்கும் மேற்பட்டோரும் மின் இணைப்புக்குக் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் மின் மீட்டர்கள் பழுதாகி உள்ளன. தற்காலிக இணைப்புகள் மற்றும் புதிய இணைப்புகள் கோரி 18,000-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.
 அதிக கட்டணம்: மின் மீட்டர் பழுதானால், மின்வாரிய விதிகளின்படி, ஓராண்டுக்கான இருமாதச் சுழற்சியின்போது அனுப்பிய அதிக மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த வேண்டும்.
 இந்த நடைமுறை மின் மீட்டர் மாற்றப்படும் வரை இருக்குமாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப்படைகின்றனர்.
 புதிதாக வீடு, வணிக வளாகம் கட்டுவோர் தற்காலிக மற்றும் புதிய மின் இணைப்பு கோரி பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர். கட்டுமானப் பணிகளுக்கு மின்சாரம் தேவையிருப்பதால், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பணிகளைச் செய்கின்றனர். கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வுடன் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் ஜெனரேட்டர் வாடகை என கூடுதல் செலவாகிறது.
 மின் வாரியத்தின் மெத்தனம்: மின்சாரம் கூடுதலாகப் பயன்படுத்துவதாகக் கூறி வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. மின் கணக்கீட்டாளர்கள் குறித்த நாள்களில் மின் கட்டணக் கணக்கீடு செய்வதில்லை.
 ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் மின் கணக்கீடு செய்து சுமார் 500 யூனிட்டுக்குள் வந்தால் கட்டணம் குறையும். ஆனால், கணக்கீட்டில் ஏற்படும் காலதாமதத்தால் 500 யூனிட்டுக்கு மேல் வரும்போது கட்டணத் தொகை மிகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
 இதனால் நுகர்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாவர்.
 பழுதான மின் மீட்டர்கள் உடனுக்குடன் மாற்றப்படாததால், அதிக தொகை செலுத்த வேண்டியுள்ளது. மின் மீட்டரை மாற்றுவது தொடர்பாக அதிகாரிகள் பதில் சொல்வதே இல்லை.
 திணறும் அதிகாரிகள்: மின் மீட்டர் பழுது தொடர்பாக நுகர்வோருக்கு பதிலளிக்க முடியாமல் மின்வாரிய அதிகாரிகளும் திணறுகின்றனர். மின் மீட்டர் விரைவில் வரும் என்பதே பதிலாக உள்ளது.
 தட்டுப்பாடின்றி மின் மீட்டர்களை அரசு வழங்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 ஸ்மார்ட் மீட்டர்: நாடு முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
 இதற்கு மாநில அரசுகள் ஆயத்தமான நிலையில் மத்திய அரசு நிதி ஒதுக்காததால் திட்டம் தொடங்கப்படவில்லை என்று தெரிகிறது.
 மீட்டருக்கு பணம் வழங்கவில்லை: தமிழகத்தில் மின் மீட்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதற்கான தொகையை அரசு வழங்கவில்லை என்பதால் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
 பழுதான மின் மீட்டர்களால் நுகர்வோர் கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. அதே நேரம், வர்த்தக நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின் மீட்டர் பழுதானால், வழக்கத்தைவிடக் கூடுதல் மின்சாரம் பயன்படுத்திக் கொள்வதால், மின் வாரியத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
 மின் மீட்டர் பிரச்னையால் தங்களது மாதாந்திர வருவாயில் கணிசமான தொகை பற்றாக்குறையாகும் நிலையில் உள்ளனர்.
 அரசு இப்பிரச்னையில் இருந்து மக்களைக் காப்பாற்ற மின் மீட்டர்களை உடனடியாக மாற்றித் தரவேண்டும். விரைவில் இது தொடர்பாக முதல்வர் தலையிட வேண்டும் என்பதே மின் நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com