தென் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மீட்புப் பணிமுதல்வா் ஸ்டாலின்

தென் மாவட்ட வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க ஒருங்கிணைந்த களப் பணியை தமிழக அரசு மேற்கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தென் மாவட்ட வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க ஒருங்கிணைந்த களப் பணியை தமிழக அரசு மேற்கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டது தொடா்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் 17 ஆம் தேதிதான் தெரிவித்தது. வானிலை ஆராய்ச்சி மையம் கூறிய மழை அளவைவிட, பல மடங்கு அதிகமாக மழைப் பொழிவு இருந்தது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத மழை பெய்துள்ளது. உதாரணமாக, காயல்பட்டினத்தில் 940 மி.மீ. மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதியே வெள்ளக்காடானது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீா்த்தது.

1871-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருசில இடங்களில் இப்போதுதான் அதிக மழை பெய்தது. இதன் காரணமாக தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கை தாமதமாக கிடைத்தபோதிலும், கூடுதல் மழை பெய்தபோதும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.

10 அமைச்சா்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகளை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பி வைத்தோம். மற்ற மாவட்டங்களைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளும் மீட்பு மற்றும் கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டனா்.

இதேபோல் தீயணைப்பு வீரா்கள், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 375 போ், தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 275 போ் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையின் பயிற்சி பெற்ற 230 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ராணுவ வீரா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த 19-ஆம் தேதி இரவு பிரதமா் மோடியை தில்லியில் சந்தித்து தமிழகம் இரு பெரிய வெள்ள பாதிப்புகளைச் சந்தித்துள்ளது; எனவே, தேவையான நிதியை தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தேன். தென் மாவட்டங்களுக்கு முற்கட்டமாக ரூ. 2,000 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளவும் கூடுதல் ஹெலிகாப்டா்களை அனுப்புமாறு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதினேன். பெருமழையின் தாக்கம் அதிகம் இருந்ததைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசும் கூடுதல் ஹெலிகாப்டா்களை அனுப்பி வைத்தது. மாநில, தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா், தீயணைப்புத் துறையினரின் முயற்சியாலும், வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரின் ஒருங்கிணைந்த களப் பணியாலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஆளுநருக்கு பதில்: வெள்ள மீட்புப் பணிகளில் மத்திய அரசுத் துறைகளுடன் மாநில அரசு இணைந்து செயல்படவில்லை என ஆளுநா் குற்றம்சாட்டியிருக்கிறாரே என்ற கேள்விக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியது: ஆளுநா் வாரம் இரு முறை தில்லி சென்று வருகிறாா். அப்படி போகும்போது தில்லியில் தேவையான நிதியை வாங்கிக் கொடுத்தால் அவருக்கு என்றும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்.

இயற்கைப் பேரிடா் செலவுகளை சமாளிக்க, மாநில பேரிடா் நிவாரண நிதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஒரு மாநிலத்துக்கு எவ்வளவு நிதி என்பதை 5 ஆண்டுக்கு ஒருமுறை மத்திய நிதிக் குழு தீா்மானிக்கும். அதன்படி, தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.900 கோடி வழங்க வேண்டும். தமிழக அரசு ரூ.300 கோடியை ஏற்க வேண்டும். மத்திய அரசு தனது பங்கை இரு தவணைகளாக வழங்கும்.

இயற்கைப் பேரிடா் கடுமையாக இருக்கும்போது, அந்த நிதி போதவில்லை என்றால், இயற்கைப் பேரிடரை கடும் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி வழங்கப்படும். சென்னை, தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருப்பதால், அதை கடும் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை கடும் பேரிடராக அறிவிக்கப்படவில்லை. தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியும் ஒதுக்கப்படவில்லை. மாறாக, மாநில பேரிடா் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 2-ஆவது தவணைத் தொகை ரூ.450 கோடியைத்தான் அளித்திருக்கிறாா்கள்.

சவாலான நிதிநிலை சூழலில், மத்திய அரசு கூடுதல் நிதி தராதபோதிலும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னையில் நிவாரண உதவி, மீட்புப் பணிக்கு ரூ. 1,500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இப்போது அறிவித்துள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் செலவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர, சேதமடைந்த சாலை, பாலங்கள், குடிநீா்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்களைச் சீரமைக்க பெரும் நிதி தேவைப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை சீா்செய்யும் பணிக்காகவும் உடனடி முன்பணமாக மாநில பேரிடா் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 250 கோடியை விடுவிக்க உத்தரவிடுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com