வாரியங்கள் - கழகங்கள் நிதியைக் கையாள கட்டுப்பாடுகள்: அரசு ஒப்புதலுக்கு பிறகே செலவிட முடியும்

தன்னாட்சி பெற்ற வாரியங்கள், கழகங்கள் தங்களது நிதியை இனி சுதந்திரமாகச் செலவிட முடியாது.

தன்னாட்சி பெற்ற வாரியங்கள், கழகங்கள் தங்களது நிதியை இனி சுதந்திரமாகச் செலவிட முடியாது. அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே நிதியைச் செலவிட முடியும். இதன்மூலம், வாரியங்கள், கழகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நிதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 
இதற்கான உத்தரவை நிதித் துறை பிறப்பித்துள்ளது. இவ்வாறு கழகங்கள், வாரியங்களின் நிதியை அரசே கையாள்வதற்கு வகை செய்ய கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு:
அரசின் நிர்வாக உத்தரவு அல்லது சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலமாக தமிழகத்தில் வாரியங்களும், கழகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அரசு சார்பில் வர்த்தக ரீதியிலான பணிகளை மேற்கொள்ளும். இந்த நிறுவனங்கள் அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், பொதுமக்களுக்கான சேவைகளையும் வழங்கி வருகின்றன.
உதாரணத்துக்கு, பூம்புகார், தமிழ்நாடு பாடநூல் கழகம், திறன் மேம்பாட்டுக் கழகம் போன்றவை தமிழகத்தின் முக்கியமான நிறுவனங்கள். 
இத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து ஊதியமோ அல்லது மதிப்பூதியமோ பெற்று வருகின்றனர். மேலும், அந்த நிறுவனங்களிலேயே பணத்தை வரவு வைத்தும், அதற்குள்ளாகவே செலவிட்டும் வருகின்றனர். இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்படுகிறது.
புதிய நடைமுறை என்ன? அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனங்கள், கழகங்கள் இனி பணத்தை அரசின் கணக்கில் இருந்தே எடுத்துச் செலவிட முடியும். அதாவது, அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது கணக்குத் தணிக்கையரின் ஆலோசனைகளுக்குப் பிறகே பணத்தை ஊழியர்கள் எடுத்துச் செலவிட முடியும். இதற்கான உரிய திருத்தங்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை விதிகளில் செய்யப்பட்டுள்ளன.
கழகங்கள் அல்லது வாரியங்களைச் சேர்ந்த ஊழியர்கள் செலவிடக் கூடிய தொகை கணக்குத் தணிக்கையருக்கு திருப்தி தரக்கூடிய வகையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மேலும், செலவுக்கான நிதியை எந்த ஊழியர் விடுவிக்கிறாரோ, அந்த நிதியானது உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான பொறுப்பு நிதியை விடுவிக்கும் ஊழியரையே சாரும். 
நிதியைச் செலவிட வழங்கியது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் இறுதி முடிவை அரசே எடுக்கும்.
வாரியங்கள், கழகங்களுக்காக செலவிட அரசிடம் இருந்து தொகையை தொடர்புடைய ஊழியர் பெறும்போது, அதை கவனமுடன் கையாள வேண்டும். இதற்கென தனித்த கணக்கைப் பராமரித்து உரிய முறையில் செலவிட வேண்டும். தொகைகள் கையிருப்பில் இருந்தால் அதை அலுவலகத்திலேயே வைக்க வேண்டும். மேலும், வாரியங்கள், கழகங்களுக்கென உள்ள திட்டம் சார்ந்த மானியங்கள், கடன்கள், வழிவகை முன்பணம் போன்றவற்றை அரசுத் துறைகளைப் போன்றே பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவால் அரசுக்கு பயனென்ன?
தமிழக அரசின் புதிய உத்தரவால், கழகங்கள், வாரியங்கள் தங்களுக்குத் தேவையான நிதியை குவித்து வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்ப கருவூலத் துறையிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முன்பாக, ஆண்டுக்கு ரூ. 10 கோடி நிதி தேவையென்றால், அதை அரசிடம் கழகங்களும், வாரியங்களும் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளும். தேவைக்குப் போக மீதமுள்ள பணத்தை வைப்பு நிதியாக வைத்துக் கொள்வது வழக்கம். அரசின் இப்போதைய உத்தரவால், நிதியை வாங்கி வைத்துக்கொள்ள முடியாது. மேலும், அரசிடம் இருந்து பெறக்கூடிய தொகை எந்தெந்த வழிகளில் எல்லாம் செலவிடப்படுகிறது என்பதும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

நிதிச் சுமையைத் தவிர்க்க ஏற்பாடு
மகளிர் உரிமைத் தொகை, இயற்கை பேரிடர்கள் போன்றவற்றால் தமிழக அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வாரியங்கள், கழகங்களிடம் அரசின் நிதி பெருமளவு குவிவதைத் தடுக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், அவை நிதியைச் சுதந்திரமாகச் செலவிடும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com