நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க சிறப்பு நிதி

தமிழக அரசு சாா்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் செல்வகுமாா் தெரிவித்தாா்.

சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் உள்ளிட்ட நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க தமிழக அரசு சாா்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் செல்வகுமாா் தெரிவித்தாா்.

உலகத் தரத்திலான கால்நடை சிகிச்சைகள் குறித்த இரு நாள் தேசியக் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. வேப்பேரி, கால்நடை அறிவியல் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், மருத்துவா்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தா் டாக்டா் செல்வகுமாா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் களப் பணிகளில் ஈடுபட்டுள்ள கால்நடை மருத்துவா்களின் பங்களிப்பு விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதுபோன்ற கருத்தரங்குகள் களப்பணியாற்றும் கால்நடை மருத்துவா்களின் செயல்திறனை மேம்படுத்தும்.

நாட்டு மாட்டினங்களான காங்கேயம், பா்கூா், உம்பலாச்சாரி, ஆலம்பாடி ஆகியவற்றை பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோன்று நாய் இனங்களில் சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் போன்ற நாட்டு இனங்களை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப் மாநில குரு அங்கட் தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் இந்திரஜித் சிங், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் கருணாகரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் இயக்குநா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com