வேகமெடுக்கும் டெங்கு: ஆலங்குளத்தில் அரசு மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் தவிப்பு!

ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்
நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்

ஆலங்குளம்: ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனையாக  தரம் உயர்த்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் இம்மருத்துவமனைக்கு இதுவரை போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. ஸ்கேன், எக்ஸ்-ரே, அவசர சிகிக்சை உபகரணங்கள் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் இங்கு வரும் நோயாளிகளை திருநெல்வேலி, தென்காசி மருத்துவமனைகளுக்கு ஊழியர்கள் அனுப்பி வைத்து விடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 50 நாள்களுக்கு மேலாக இப்பகுதியில் டெங்கு நோய் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாள்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு 2 பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளதால் அவர்களால் உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெறுமையாக காணப்படும் மருத்துவர்கள் வருகை பதிவேடு பலகை
வெறுமையாக காணப்படும் மருத்துவர்கள் வருகை பதிவேடு பலகை

இது குறித்து தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பிரேமலாதவிடம் கேட்ட போது, மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை உள்ளது. திருமணம் காரணமாக ஒரு மருத்துவர் விடுப்பில் உள்ளார். மாற்று மருத்துவர் ஏற்பாடு செய்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com