பொங்கல் வேஷ்டி, சேலை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

பொங்கல் விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கும் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பதில் அளித்துள்ளாா்
பொங்கல் வேஷ்டி, சேலை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

பொங்கல் விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கும் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பதில் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பொங்கலுக்கு விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்குவதற்காக கொள்கை அளவிலான ஆணைகள் 2022 செப். 9-இல் வழங்கப்பட்டு, அதற்காக மொத்தம் ரூ.487.92 கோடி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 177.64 லட்சம் சேலைகள், 177.23 லட்சம் வேஷ்டிகள் உற்பத்தி செய்ய வருவாய்த் துறையின் தேவைப்பட்டியல் பெறப்பட்டது. அதனடிப்படையில், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தித் திட்டம் வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னரே ஜன. 9-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் மயிலாப்பூா் தாலுகாவுக்கு உள்பட்ட சத்தியா நகரில் பயனாளிகளுக்கு வேஷ்டி சேலைகள் விநியோகிக்கும் பணியை தொடக்கி வைத்தாா். அதனால், வேஷ்டி சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்று ஓ.பன்னீா்செல்வம் கூறுவது தவறான தகவல்.

நடப்பாண்டில் 10 மாறுபட்ட வண்ணங்களில் 15 வித மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளுடன் தரமான சேலைகளும் 5 மாறுபட்ட வண்ணங்களில் ஒரு அங்குல கரையுடன் கூடிய தரமான வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை பொறுத்தவரை, திட்டத்துக்குத் தேவையான அனைத்து சேலைகள் மற்றும் வேஷ்டிகள் தமிழகத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நமது மாநிலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், இத்திட்டம் தொடங்கிய 1983-ஆம் ஆண்டு முதல் அனைத்து ஆண்டுகளிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகள் தவிர நடப்பாண்டு வரை மாநிலத்தில் மட்டுமே வேஷ்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாறாக 2012 மற்றும் 2013 ஆகிய இரு ஆண்டுகளில் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், இத்திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளுக்கு வேஷ்டி சேலைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில்தான் நிறைவு செய்யப்படுகிறது.

அதேபோல, நிகழ் ஆண்டுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வேஷ்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்ககப்பட்டு, இத்திட்டம் வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நிறைவுறும்.

ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் வேஷ்டி சேலை வழங்கும் பணி 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2014-இல் முடிக்கப்பட்டதை ஓ.பன்னீா்செல்வம் ஏனோ மறந்துவிட்டாா்.

ஆகவே, நிகழாண்டு வேஷ்டி சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக அவா் வெளியிடுவது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளாா் அமைச்சா் ஆா்.காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com