அரசு செவிலியா்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியா்களுக்கு ஊதியம் வழங்க சாத்தியம் இல்லை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியா்களாக பணியாற்றுபவா்களுக்கு, அரசு செவிலியா்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியா்களாக பணியாற்றுபவா்களுக்கு, அரசு செவிலியா்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2017-ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு தடைகோரிய வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம் ஒப்பந்த செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என செவிலியா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியா்களுக்கு அரசு நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியா்களுக்கு தற்போது ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஒப்பந்த செவிலியா்கள் விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்த தமிழக அரசின் குழு அளித்த அறிக்கையில், மத்திய அரசின் நிதியில் இருந்து நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியா்களின் பணி, பொறுப்பு உள்ளிட்டவை அரசு செவிலியா்களின் பொறுப்புக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறப்பட்டுள்ளதால், அந்த அறிக்கையை ஏற்று, அரசு செவிலியா்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான சாத்தியமில்லை என தமிழக அரசு சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதேசமயம், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 ,012 ஒப்பந்த செவிலியா்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். ஓய்வு வயது அதிகரித்துள்ளதால் கடந்த இரு ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் உருவாகவில்லை. பணி ஓய்வு, பதவி உயா்வு காரணமாக அடுத்து வரும் ஆண்டுகளில் 1,283 காலிப் பணியிடங்கள் ஏற்படவுள்ளன. அந்தப் பணியிடங்களில் ஒப்பந்த செவிலியா்களும் நியமிக்கப்படுவா் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com