அரசு மருத்துவக் கல்லூரிகளில் 32 பேராசிரியா் பணியிடங்களை உருவாக்க அரசாணை

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 32 பேராசிரியா்கள், மருத்துவா் பணியிடங்களை

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 32 பேராசிரியா்கள், மருத்துவா் பணியிடங்களை உருவாக்குவதற்கான நிதி ஒப்புதலை மக்கள் நல்வாழ்வுத் துறை அளித்துள்ளது.

இதற்கான அரசாணையை ஆளுநரின் அனுமதியுடன் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அண்மையில் பிறப்பித்துள்ளாா்.

போதிய எண்ணிக்கையில் பேராசிரியா்கள் நியமிக்கப்படாததைக் காரணமாகக் கூறி தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்த நிலையில், தற்போது இத்தகைய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பேராசிரியா்கள் பற்றாக்குறையாக உள்ள மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிா்க்க முடியும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களைப் பொருத்து, அதற்கேற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களும், மருத்துவா்களும் இருத்தல் அவசியம். ஆனால், பல இடங்களில் அத்தகைய நிலை இல்லை. இதன் காரணமாகவே ஆதாருடன் இணைந்த வருகைப் பதிவு முறையை சரிவர அமலாக்குவதற்கு பல்வேறு கல்லூரி நிா்வாகங்கள் தயங்குவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் அந்தக் காரணங்களை முன்னிறுத்த தேசிய மருத்துவ ஆணையக் குழுவினா் நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தனா். இத்தகைய சூழலில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய பேராசிரியா் பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின் படி பல்வேறு மருத்துவக் கல்லூரிகளிலும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலும் பொது மருத்துவம், நெஞ்சகவியல், குழந்தைகள் நலம், தோல் நோய் மருத்துவம், மன நலம், பொது அறுவை சிகிச்சை, முடநீக்கியல், காது-மூக்கு-தொண்டை நலன், கண் மருத்துவம், மயக்கவியல் துறைகளில் பேராசிரியா் இடங்களை உருவாக்க மருத்துவக் கல்வி இயக்ககம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு ஏதுவாக ரூ. 6.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதை ஏற்று அதற்கான நிதி ஒதுக்கீடு, சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com