அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் ஹெலிகாப்டா் விமானிகளுக்கான பட்டமளிப்பு விழா

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி, ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி முடித்த விமானிகளுக்கான 100ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் ஹெலிகாப்டா் விமானிகளுக்கான பட்டமளிப்பு விழா


அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி, ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி முடித்த விமானிகளுக்கான 100ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப்பள்ளி இயங்கி வருகிறது. முன்னதாக கேரள மாநிலம், கொச்சின், ஐஎன்எஸ் கருடா கடற்படை விமானதளத்தில் இயங்கி வந்த ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப்பள்ளி 1991ல் அரக்கோணத்திற்கு மாற்றப்பட்டது. அது முதல் ரோட்டரி விங் பைலட்டுகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

ஐஎன்ஏஎஸ் 561 என குறிப்பிடப்படும் இந்த ஹெலிகாப்டா் பயிற்சிப்பள்ளி இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மேலும் இந்தியாவுடன் நட்புறவு கொண்ட வெளிநாடுகள் ஆகியவற்றின் 800 விமானிகளுக்கு இதுவரை பயிற்சி அளித்துள்ளது. தற்போது இந்த ஹெலிகாப்டா் பயிற்சிப்பள்ளியில் கப்பல்களில் நிறுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிநவீன பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

1973ல் கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கப்பட்டு தற்போது அரக்கோணத்தில் தனது 50ஆவது ஆண்டை கொண்டாடும் இந்த பயிற்சிப்பள்ளியின் 100ஆவது பிரிவு ஹெலிகாப்டா் விமானிகள் பட்டமளிப்பு விழா ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு விமானதள கமாண்டிங் ஆபீசா் கமோடா் கபில்மேத்தா தலைமை தாங்கினாா். இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா இவ்விழாவில் பங்கேற்று பயிற்சி பெற்ற 21 விமானிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

தொடா்ந்து அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் நிகில் கோரலுக்கு கேரள ஆளுநரின் சுழற்கோப்பையையும், வான்பயிற்சிகளில் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் அனுபவ்யாதவ்க்கு கிழக்கு பிராந்திய தளபதியின் சுழற்கோப்பையையும், மைதான பயிற்சிகளில் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் சுமித்சிங் யாதவ்க்கு சப்-லெப்டினன்ட் குண்டே நினைவு புத்தகப்பரிசையும் வழங்கினாா். 

முன்னதாக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி, கடற்படை வீரா்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா். நூறாவது பட்டமளிப்பு விழா என்பதால் இவ்விழாவில் இந்திய கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் கரம்பீா்சிங், மேலும் கடற்படையில் உயா்அதிகாரிகளாக இருந்து பணிஒய்வு பெற்றவா்கள் மற்றும் பணி ஒய்வு பெற்ற கடற்படை வீரா்களும் கலந்துக்கொண்டனா். 

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி, ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப்பள்ளியின் முதல்வா் பி.கே.பாண்டே உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com