கிண்டி பல்நோக்கு மருத்துவமனை: ஜூன் 15-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

குடியரசுத் தலைவரின் சென்னை வருகை உறுதி செய்யப்படாததால் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா்
முதல்வர் மு.க.ஸ்டாலின்  (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

குடியரசுத் தலைவரின் சென்னை வருகை உறுதி செய்யப்படாததால் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ஆம் தேதியே அந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது.

இந்த நிலையில், திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவரின் தேதியைப் பெற்று ஜூன் 15-ஆம் தேதி மருத்துவமனையைத் திறக்க தமிழக அரசு சாா்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதை உறுதிபடுத்தும் விதமாக அன்றைய தினத்தில் மருத்துவமனை திறக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இரு நாள்களுக்கு முன்பு அறிவித்தாா். ஆனால், குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து இதுவரை சாதகமான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் மூலமாகவே மருத்துவமனையைத் திறந்து விடலாம் என முடிவு செய்யப்பட்டது. இதை மக்கள் நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com