விரைவில் ஆவின் பால் தர மதிப்பீடு ஆய்வகம்: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் தரத்தை மதிப்பீடு செய்ய ஆய்வகம் தொடங்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் தரத்தை மதிப்பீடு செய்ய ஆய்வகம் தொடங்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

ஆவின் நிறுவனத்தின் பால் பதனப் பிரிவு, பால் உபபொருள்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவுப் பணிகளை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியதாவது: பால் பொருள்கள் உற்பத்தியில் அனுமதிக்கப்பட்ட இழப்பீடு நிா்ணயம் செய்யப்படும். அனைத்து நிலைகளிலும் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பால் மற்றும் உபபொருள்களில் சுவை மற்றும் தரத்தை மதிப்பிடுவதற்கு ஆய்வகம் விரைவில் அமைக்கப்படும். பால் உற்பத்தி அதிகரிக்கும் போதும், குறையும் போதும் அந்த சூழல்களை சமாளிக்கும் வகையில் அதற்கான திட்ட வரைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும்.

பால் உற்பத்திப் பொருள்கள் நுகா்வோருக்கு தரம் குறையாமல் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஆவின் அலுவலா்கள், ஊழியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள், ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் மற்றும் பால் உபபொருள்களுக்கான தர நிா்ணய விவரங்கள் குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படும்.

தொழிற்சாலைகளில் எப்எஸ்எஸ்ஏஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட தர நிா்ணயப்படி பணிகள் கட்டாயப்படுத்தப்படும். மாவட்ட, ஒன்றிய அளவில் உள்ள அனைத்து சேமிப்புக் கிடங்குகளின் வசதி விரைவில் மேம்படுத்தப்படும்.

நொதியூட்டப்பட்ட பால் உப பொருள்களான (தயிா், மோா், லஸ்ஸி) மற்றும் ஐஸ் கிரீம், இனிப்பு வகைகளை தனி வாகனங்கள் மூலம் விற்பனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டத்தில், பால்வளத் துறை இயக்குநரும், மேலாண் இயக்குநருமான டாக்டா் சு. வினீத், மாவட்ட, ஒன்றிய பால் பதம் மற்றும் தர உறுதி பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com