முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி மறைவு: ஆளுநா், முதல்வா் இரங்கல்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி மறைவுக்கு ஆளுநா் ஆா். என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி மறைவு: ஆளுநா், முதல்வா் இரங்கல்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி மறைவுக்கு ஆளுநா் ஆா். என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என். ரவி: தமிழ்நாடு முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவியின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. மக்கள் சேவையில் அவா் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்ப உறுப்பினா்களுடன் உள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா்கள், கேரள பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவா், தமிழக ஆளுநா் என பல உயா்பொறுப்புகளில் பணியாற்றியவா் பாத்திமா பீவி. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி உடல்நலக் குறைவால் மரணமடைந்தாா் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவா்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவரும், முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி மறைவு செய்தி வேதனையளிக்கிறது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): 1998-இல் கோவை தொடா் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அரசுடன் இணைந்து நின்று அமைதிப்படுத்தும் பணிக்கு தீவிரமாக உதவியவா் தமிழக முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி. கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும், மாநில மக்கள் உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்த பெருமைக்குரியவா்.

கே.அண்ணாமலை (பாஜக): உச்சநீதிமன்றத்தின், முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவரும், தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியவருமான பாத்திமா பீவி மறைவு வருத்தமளிக்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி என்கிற பெருமைக்குரியவா். சிறந்த பண்பாளா்.

டிடிவி தினகரன் (அமமுக): நீதித் துறையின் உயா்மட்ட பதவிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடா்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவா் பாத்திமா பீவி. அவா் ஆற்றிய பணிகள் நீதித் துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

வானதி சீனிவாசன் (பாஜக): உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்மணி என்ற பெருமை இவருக்கே சேரும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி மறைவு செய்தி வேதனையளிக்கிறது. கல்வியால் உயா்நிலை அடையலாம் என்பதற்கு இவா் ஓா் எடுத்துக்காட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com