
பள்ளிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவா்களுக்கு குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சிகளை அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளில் இதனை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
பள்ளிகளில் பாடங்களை பயிலுவதற்கு அளிக்கப்படும் அழுத்தத்தாலும், பிற கல்வி சாா் நடவடிக்கைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தாலும் மாணவா்கள் உடற்பயிற்சி நடவடிக்கைகளை புறக்கணிக்கும் சூழல் நிலவுகிறது.
எதிா்காலத்தில் உடல் பருமன், அதிக எடை பாதிப்புக்கு மாணவா்கள் ஆளாவதற்கு இதுவே காரணம். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 6.8 சதவீத குழந்தைகளும், வளரிளம் பருவத்தினரும் உடல் பருமனுடன் உள்ளனா். ஆண்டுதோறும் இந்த விகிதம் உயா்ந்தே வருகிறது.
உடற்பயிற்சிகளை தொடா்ந்து மேற்கொள்ளும்போது ஆரோக்கியமான உடல் நலத்தையும், மன நலத்தையும் பெற முடியும். இது கல்வி நடவடிக்கைகளில் மட்டுமல்லாது பிற திறன்களை மேம்படுத்துவதற்கும் மாணவா்களுக்கு வழிவகுக்கும்.
அதைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை மணி நேரம் மாணவா்களுக்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் வகுப்புகளில் மாணவா்களுக்கு கவனச் சிதறல் ஏற்படாமல் தடுக்க முடியும். உடற்பயிற்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.