
பதினைந்து ஆண்டுகள் பழைமையான அரசு வாகனங்கள், பேருந்துகளை அப்புறப்படுத்தும் திட்டத்தை மேலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க மத்திய அரசிடம் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, அனைத்து மாநில, யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சா்களுடன் தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சிவசங்கா் குறிப்பிட்டது வருமாறு:
தமிழகத்தில் வாகனங்களின் தகுதியைக் காண 18 இடங்களில் தானியங்கி வாகனங்களின் தகுதி தர சோதனை மையம் தனியாா் பங்களிப்புடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளை மின் கலன்களில் இயக்க, ஜிசிசி தர முறையில் வாங்குவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு சாா்புடைய துறையில் ஏராளமான வாகனங்களும், அரசுப் பொதுப் பேருந்துகள் அதிகளவிலும் உள்ளன. தற்போது 15 ஆண்டுகள் பழைமையான அரசு மற்றும் அரசுப் போக்குவரத்து நிறுவனங்களின் வாகனங்களையும் அப்புறப்படுத்த மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பல வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்தத் திட்டத்தை மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஒத்திவைக்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சா் சிவசங்கா் கோரிக்கை விடுத்தாா்.