
மதுரை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்யாதது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் இருந்து கார் மூலம் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரையிலிருந்து புதன்கிழமை விமான மூலம் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டை கிராமங்கள் நகரங்கள் என அனைவரிடமும் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்வதற்காக மதுரை வந்தேன்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக திமுகவின் நாளேட்டில் வந்த செய்தி குறித்து கேட்கின்றீர்கள், இது தொடர்பாக ஏற்கனவே நான் பத்திரிகைகள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறிவிட்டேன். பேரவையில் நான் பேசியபோது முதல்வர் மௌனமாக இருந்தார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு.
ஆனால் திமுக வழக்குரைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினரே வழக்காடி அந்த குற்றவாளிகளை விடுவித்து உள்ளார். அவர்களுக்கு ஜாமீன் அளித்ததும் திமுகவினர்தான். ஏன் அது தொடர்பாக ஜாமீன் அளித்தவர்களிடம் தற்போது வரை விசாரணை செய்யவில்லை என தெரியவில்லை. தமிழக அரசு கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | காவிரி நீர் பிரச்னை: தஞ்சாவூரில் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
சமையல் எரிவாயு உருளை விலை குறைக்கப்பட்டது தேர்தலுக்காக என கூறுகின்றனர். அதேபோல தானே தமிழகத்திலும் கடந்த 27 மாதங்களாக மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்கப்படாமல் தற்போது தேர்தலை மையப்படுத்தி உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்திலும் தேர்தலுக்காக மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை தமிழக அரசு குறைக்கலாமே. தற்போது இந்தியா கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தையே காப்பாற்ற முடியாதவர்கள் இந்தியாவை காப்பாற்ற கிளம்பி விட்டார்கள். காவிரி நீர் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை கேட்டு வாங்குவதற்கு முதல்வர் தயங்குகிறார்.
அதிமுக எந்த கட்சிக்கும் எப்போதும் அடிமை கிடையாது. திமுக தான் பதவிக்காக அடிமையாக இருக்கும். கர்நாடகம் சென்ற முதல்வர் அங்கு காவிரி நீரை கேட்டு பெறாமல் நான் டெல்டாகாரன் எனக் கூறுகிறார். காவிரி டெல்டா பகுதியில் நெல் பயிர் கருகியதற்கு எந்த தீர்வும் காணவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மதுரை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எடப்பாடி பழனிசாமியின் வரைபடத்தை வழங்கினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...