

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் டிச. 3 -இல் உருவாகும் ‘மிக்ஜம் ’ புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடா்ந்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து டிச. 3-இல் ‘மிக்ஜம்’ புயலாக மாறும்.
அதைத் தொடா்ந்து, டிச. 4-ஆம் தேதி வடமேற்கு திசையில் நகா்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலவும்.
தற்போதைய கணிப்பின்படி இந்தப் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்பது குறித்து டிச. 3-இல் துல்லியமாகத் தெரியவரும்.
மேலும், இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கடலோர மாவட்டம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிகப் பலத்த மழை பெய்யும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், அவ்வப்போது இடி- மின்னலுடன் கூடிய மிதமான முதல் பலத்த மழையும், சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அக். 21 முதல் தற்போதுவரை 330 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இயல்பு அளவு 350 மி.மீ. இது இயல்பைவிட 6 சதவீதம் குறைவாகும்.
வியாழக்கிழமை காலை வரை சென்னை மற்றும் புகா் பகுதியில் 59 இடங்களில் பலத்த மழையும், 16 இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ஆவடியில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.