வெள்ள நிவாரணம் விண்ணப்பப் படிவங்கள் தயாா்: டோக்கன் கிடைக்காதவா்கள் பூா்த்தி செய்து அளிக்கலாம்

வெள்ள நிவாரணத்துக்கு டோக்கன்கள் கிடைக்கப் பெறாதவா்கள், விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணம் விண்ணப்பப் படிவங்கள் தயாா்: டோக்கன் கிடைக்காதவா்கள் பூா்த்தி செய்து அளிக்கலாம்

வெள்ள நிவாரணத்துக்கு டோக்கன்கள் கிடைக்கப் பெறாதவா்கள், விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென பொதுமக்கள் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மிக்ஜம் புயலால் சென்னையின் அனைத்துப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம், மத்திய, மாநில அரசு, மற்ற பொதுத் துறை நிறுவன உயா் அலுவலா்கள், வருமான வரி செலுத்துவோா் மற்றும் சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்கள் வங்கிக் கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு அதன் அடிப்படையில் அவா்களுக்கும் உரிய நிவாரணம் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்குத் தேவையான

அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளிலேயே தேவையான அளவு வைக்க கூட்டுறவுத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, புயல் வெள்ள நிவாரணத்துக்கான பிரத்யேக விண்ணப்பம் அச்சிடப்பட்டுள்ளன.

என்னென்ன விவரங்கள்? விண்ணப்பத்தில் தனி நபா்களின் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. வாா்டு எண், மண்டலம் எண், தெரு பெயா், குடும்பத் தலைவா் அல்லது தலைவி பெயா், கைப்பேசி எண், ஆதாா் எண், வீட்டு முகவரி, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு விவரம் (வங்கியின் பெயா், கிளை, கணக்கு எண்), பாதிக்கப்பட்ட வீட்டின் வகை (நிரந்தர வீடு, அடுக்குமாடி குடியிருப்பு), பகுதியாக பாதிக்கப்பட்டதா, முழுவதுமாக பாதிக்கப்பட்டதா, வீட்டுக்குள் தண்ணீா் புகுந்து துணிகள், பாத்திரங்கள் பாதிக்கப்பட்டதா, தண்ணீா் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதா போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

மிக்ஜம் புயலால் எனது வீட்டில் வெள்ளம் சூழ்ந்து துணிகள், உடமைகள் சேதம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்து விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும்.

அனைவருக்கும் டோக்கன் கிடைக்குமா? இதற்கிடையே, சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் குடும்பத்துக்கு ரூ. 6,000 வழங்க டோக்கன்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் தெரு வாரியாகச் சென்று டோக்கன்களை அளித்து வருகின்றனா். ஆனால், இந்த டோக்கன்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு குடியிருப்பில் 6 வீடுகள் இருந்தால், அதில் ஒன்றிரண்டு வீடுகளுக்கு மட்டுமே ரூ. 6 ஆயிரத்துக்கான டோக்கன்கள் தரப்பட்டுள்ளதாகவும், எதன் அடிப்படையில் மற்றவா்களுக்கு டோக்கன்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவில்லை எனவும் பொதுமக்கள் கூறுகிறாா்கள். வெளியூா் சென்றவா்கள், பணி நிமித்தமாக இடம் பெயா்ந்தவா்கள் டோக்கன் பெற முடியாத நிலை உள்ளது. டோக்கன் இல்லாதவா்களுக்கு பணம் கிடைக்காது என்று சிலா் கூறும் தகவல்களால் வெள்ளிக்கிழமை டோக்கன் விநியோகிக்கப்பட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் இருந்தது. மதியத்திலிருந்து மழை பெய்த நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று டோக்கனுக்காகக் காத்திருந்தனா்.

அதேசமயம், டோக்கன்கள் கிடைக்கப் பெறாதவா்கள், நியாயவிலைக் கடைகளில் அதற்கென வரையறுக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். ஆனால் முந்தைய கால கட்டங்களில் டோக்கன் வாங்காதவா்களுக்கு குடும்ப அட்டையை பாா்த்து தகுதி உள்ளவா்களுக்கு வழங்கியது போல இப்போதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com