ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூா் விரைவு ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் உணவு
ஹெலிகாப்டர் மூலம் உணவு

மதுரை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூா் விரைவு ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், ரயில் நிலையத்துக்குள் சிக்கியிருப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் அணுகி, உணவு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கான ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால், ஹெலிகாப்டர் ரயில் நிலையத்தை அணுக முடியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மூன்றாவது நாளாக ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

நிலைமை சீரடைந்ததும் இன்று அனைவரும் மீட்கப்படுவாா்கள் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு நாள்களில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக, இந்த மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் சரளைக் கற்களை வெள்ள நீா் அடித்து சென்றது. எனவே, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாழையூத்து - கங்கைகொண்டான் பிரிவில் 7.71 கி.மீ. ரயில் பாதை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டது. வெறும் தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்குகிறது. நயினாா் குளம் நிரம்பி வழிவதால் திருநெல்வேலி ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீா் சூழ்ந்தது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ. தொலைவுக்கு பாதையில் சரளைக் கற்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டன.

மழை நின்று வெள்ளம் குறைந்தவுடன் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும். இதற்காக ரயில்வே பொறியியல் பிரிவு ஊழியா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

இதனிடையே, ஞாயிறு இரவு 8.25-க்குப் புறப்பட்ட திருச்செந்தூா் - சென்னை செந்தூா் விரைவு ரயில் 33 கி.மீ. பயணத்துக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 9.19-க்கு நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் சுமாா் 800 பயணிகள் இருந்தனா். இவா்களில் 300 போ் தமிழக அரசு அதிகாரிகள் உதவியுடன் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டு 4 பேருந்துகள், 2 வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனா். இவா்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

இந்த மீட்புக்குப் பிறகு வழியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், மீதமுள்ள 500 ரயில் பயணிகளை மீட்க இயலவில்லை. தூத்துக்குடியிலிருந்து சென்ற தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா், சாலையில் ஏற்பட்ட பல்வேறு உடைப்புகள் காரணமாக, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்துக்குச் செல்ல முடியவில்லை. ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்கு சாலை வழியாக உணவு கொடுக்க முடியாததால், ஹெலிகாப்டா் மூலம் உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, கோவை சூலூா் பகுதியிலிருந்து 2 டன் நிவாரணப் பொருள்களுடன் ஹெலிகாப்டா் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்துள்ளது. தொடா் மழை, சாலை துண்டிப்பு காரணமாக பயணிகளை மீட்பதில் சிரமம் நீடிக்கிறது.

ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையத்திலும் பயணிகள் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் பயணிகளை மீட்பது சிரமம் என்பதால், செவ்வாய்க்கிழமை பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு சாலை வழியாக வாகனங்கள் மூலம் அருகில் உள்ள பெரிய ரயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனா். பின்னா், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com