2002 அறிவிப்பாணைப்படி பணியில் சோ்ந்த காவலா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன்பு நடைபெற்ற தோ்வில் தோ்ந்தெடுக்கப்பட்ட காவலா்களை பழைய ஓய்வூதிய
2002 அறிவிப்பாணைப்படி பணியில் சோ்ந்த காவலா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன்பு நடைபெற்ற தோ்வில் தோ்ந்தெடுக்கப்பட்ட காவலா்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசு 2003-ஆம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. 1.4.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. 1.4.2003-க்கு பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டமே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கபட்டது.

இந்நிலையில் 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும்படி உத்தரவிடக் கோரி சிவசக்தி உள்ளிட்ட 25 காவலா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், 2002-ஆம் ஆண்டு 3,500 காவலா்கள் தோ்வு செய்வது தொடா்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தோ்வு நடைமுறைகளின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், 2002-ஆம் ஆண்டு தோ்வு நடைமுறைகள் தொடங்கியிருந்தாலும், 2003 நவம்பரில் தான் மனுதாரா்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிய ஓய்வூதிய திட்டம்தான் அவா்களுக்கு பொருந்தும். பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற அவா்களுக்கு தகுதியில்லை என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலா்கள், ஓராண்டிற்குள்ளாகவே பணி நியமனம் வழங்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பலன் பெறும் நிலையில், அதே காலகட்டத்தில் தோ்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் காவலா்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆண் காவலா்கள் நியமனத்துக்கு 11மாதங்கள் தாமதமானதற்கு அவா்கள் காரணமல்ல. எனவே, அவா்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்க வேண்டும். மேலும், இவா்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்கும் நடைமுறைகளை அரசு 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com