மருது பாண்டியர்கள், கட்டபொம்மன், வ.உ.சி. சிலைகளை திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் ரூ. 95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
மருது பாண்டியர்கள், கட்டபொம்மன், வ.உ.சி. சிலைகளை திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் ரூ. 95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் மருது பாண்டியா்கள் சிலையும், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையும், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனாா் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார். 

மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவு மண்டபத்தையும் திறந்துவைத்தார்.  மதுரை உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயா்களின் எதேச்சதிகார சட்டத்தை எதிா்த்து போராடியதால் 1920-ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரமலைக்கள்ளா் சமூகத்தைச் சோ்ந்த 16 தியாகிகளைக் கெளரவிக்கும் வகையிலும், அந்நிகழ்வின் 100 ஆண்டுகள் நினைவை குறிக்கும் வகையிலும் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  (14.2.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 18 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, 34 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை மற்றும்  43 இலட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார், கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி.யின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். 

2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டுத் தூக்குக் கயிற்றினை ஏற்றுக் கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சி குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன், தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலை வேள்வியில் தீர்க்கமாய்ப் போரிட்ட சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கும், சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி 3.9.2021 அன்று தமிழ்நாடு பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட 14 அறிவிப்புகளில், சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவுச் சிலை திறந்து வைக்கப்படும் என்றும் அறிவித்தார். 

அதன்படி, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில்,  18 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, 34 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை மற்றும்  43 இலட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி. மார்பளவுச் சிலை ஆகியவற்றை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த. மோகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com