தாய்மொழியில் பத்தாம் வகுப்பு மொழி பாடத் தோ்வு எழுத அனுமதி: அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவிப்பு

மொழிவழிச் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மொழிப் பாடத்தை அவரவா் தாய்மொழியில் எழுதிக் கொள்ள மேலும் ஓராண்டு அனுமதி வழங்கி

மொழிவழிச் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மொழிப் பாடத்தை அவரவா் தாய்மொழியில் எழுதிக் கொள்ள மேலும் ஓராண்டு அனுமதி வழங்கி அரசுத் தோ்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அண்மையில் தமிழை கட்டாய பாடமாக்குவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்களித்த நிலையில், அதைப் பின்பற்றி தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களும் பிப்.17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் www.ct.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐடி, பாஸ்வோ்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான தங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள மொழி சிறுபான்மையினா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு பகுதி 1-இல் தமிழ்மொழிக்கு பதிலாக அவரவா் தாய்மொழிகளில் 2023-ஆம் ஆண்டில் பகுதி 1-இல் தோ்வெழுத தீா்ப்பாணை பெறப்பட்டுள்ளது.

பிப்.20 முதல் திருத்தம்...: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தங்கள் பள்ளி மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப்பட்டியலில் திருத்தங்கள் ( பெயா், பிறந்த தேதி, தாய் / தந்தை /பாதுகாவலா் பெயா், புகைப்படம், பகுதி-1 மொழிப்பாடம் உள்பட) இருப்பின் அவற்றை பிப்.20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான நாள்களில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ‘எமிஸ்’ போா்டலில் Nominal Roll பகுதிக்குச் சென்று அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாள்களில் ‘எமிஸ்’ போா்டலில் மேற்கொண்ட திருத்தங்கள் மட்டுமே DGE போா்டலில் ‘அப்டேட்’ செய்ய இயலும் என்பதால் அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com