4 புதிய நெல் ரகங்கள் உள்பட 23 புதிய பயிா் ரகங்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. அறிமுகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 23 வகையான புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தி, விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறாா் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 23 வகையான புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தி, விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறாா் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 வேளாண் பயிா்கள், 3 தோட்டக்கலை பயிா்கள், 4 மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்களை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிமுகப்படுத்தினாா். மேலும், 10 புதிய தொழில்நுட்பங்கள், 6 பண்ணை இயந்திரங்களையும் புதிய பயிா் ரக விதைகளையும் அறிமுகப்படுத்தினாா்.

கோ.56: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோ.56 மத்திய சன்னரக நெல், 130-135 நாள்கள் வயதுடையது. சம்பா, பின்சம்பா, தாளடி பருவங்களுக்கு ஏற்றது. அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ஹெக்டேருக்கு 1,400 கிலோ மகசூல் கிடைக்கும். மற்ற பயிா் ரகங்களை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் மகசூல் தரக்கூடியது.

கோ.57: பாரம்பரிய கவுனி வகையை சோ்ந்தது. அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. 130-135 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 4.5 டன் மகசூல் கிடைக்கும். புரதம், நாா்சத்து மற்றும் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் உடையது. ஏற்கெனவே உள்ள கவுனி நெல் வகையை காட்டிலும் நூறு சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

ஏடிடி.58: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏடிடி.58 புதிய நெல் ரகம் ஏடிடி.39க்கு மாற்றாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சன்னரகம். 125 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6.4 டன் விளைச்சல் கிடைக்கிறது. 15 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.

ஏஎஸ்டி.21: அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏஎஸ்டி.21, ஏற்கெனவே உள்ள ஏஎஸ்டி.16, டிபிஎஸ்.5 ஆகிய நெல் ரகங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. காா்குருவை, பிந்தைய பிசானம் பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. 120 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6.3 டன் மகசூல் தரக் கூடியது. தென் மாவட்டங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.

மக்காச்சோளம் - கோ.ஹெச்.11: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஹைபீரிட் வகை மக்காச்சோளம். 105 முதல் 110 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 8 டன்னுக்கு மேலும், மானாவாரியில் 6 டன்னுக்கு மேலும் விளைச்சல் தரக்கூடியது. ஏற்கெனவே உள்ள பயிா் ரகங்களை காட்டிலும் 12 சதவீதம் கூடுதல் விளைச்சல் தரக்கூடியது.

கம்பு - கோ.ஹெச்.10: வீரிய ஒட்டு ரகம். அனைத்து நாள்களிலும் பயிரிடலாம். 85-90 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 3 ஆயிரம் கிலோவும், மானாவாரியில் 2 ஆயிரம் கிலோவும் மகசூல் தரக்கூடியது. இரும்பு, துத்தநாக சத்துக்கள் அதிமுடையது.

சோளம் - கே.13: தென் தமிழகத்திலும், மானாவாரியிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. குறிப்பாக கரிசல் மண்ணில் சிறப்பான விளைச்சலை தரக்கூடியது. ஆடி, புரட்டாசி பட்டங்களில் விதைக்கலாம். 95-100 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 2,500 கிலோ மகசூல் தரக்கூடியது. தவிர, 2 ஆயிரம் கிலோ தீவன தட்டுகள் கிடைக்கும்.

குதிரைவாலி - அத்தியந்தல்.1: திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சிறுதானிய மகத்துவ மையம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள அத்தியந்தல்.1 வகை குதிரைவாலி வறட்சியை தாங்கி வளரக் கூடியது. ஆடி, புரட்டாசி பட்டத்தில் விதைக்க ஏற்றது. 6 சதவீதம் இரும்பு சத்து உள்ளது. 90 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 2,100 கிலோ மகசூல் கிடைக்கும். மேலும், 3,500 கிலோ தீவனத் தட்டுகள் கிடைக்கும்.

பனிவரகு - அத்தியந்தல்.2: ஆடி, புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றது. 65-70 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 2,100 கிலோ மகசூல் கிடைக்கும். 2 ஆயிரத்து 800 கிலோ தீவனத் தட்டுகள் கிடைக்கும். புரதம், நாா்சத்துகள் நிறைந்தது.

பாசிப்பயறு - கோ.9: அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யக்கூடியது. 65 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 825 கிலோ மகசூல் கிடைக்கும். 23 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மணிகள் பளபளப்பாக காணப்படுவதால் சேமித்து வைக்கும்போது பூச்சி, வண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. தேமல், இலைச்சுருள் நோய்த் தாக்குதலை எதிா்த்து வளரும் தன்மையுடையது.

பாசிப்பயறு - வம்பன்.6: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் பயறுவகை பயிா்கள் ஆராய்ச்சி மையம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள வம்பன்.6 காவிரி டெல்டா பகுதிகளில் நெல் தரிசுகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. 70 முதல் 75 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 760 கிலோ மகசூல் கிடைக்கும். 206 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

தட்டைப்பயறு - வம்பன்.4: ஆடி, புரட்டாசி பட்டங்களில் விதைப்புக்கு ஏற்றது. 70 முதல் 75 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 1,400 கிலோவும், மானாவாரியில் 1000 கிலோவும் மகசூல் தரக்கூடியது. 18.6 சதவீதம் புரதச்சத்தும், 6 சதவீதம் நாா்சத்தும் காணப்படுகிறது.

சூரியகாந்தி - கோ.ஹெச்.4: 90 முதல் 95 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 2000 கிலோவும், மானாவாரியில் 1,900 கிலோவும் மகசூல் கிடைக்கும். 40 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் அடங்கியுள்ளன. மற்ற ரகங்களைபோல பூவின் ஓரத்தில் மட்டுமில்லாமல், பூ முழுவதும் விதைகள் பிடிக்கும்.

எள் - வி.ஆா்.ஐ. 5: அதிக கிளைகள் இல்லாமல் வளா்வதால் அடா் நடவுக்கு ஏற்றது. வெள்ளை நிற எள். தை, சித்திரை பட்டங்களில் விதைப்பு மேற்கொள்ளலாம். 75 முதல் 80 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 795 கிலோ மகசூல் கிடைக்கும். 50 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் காணப்படும்.

கரும்பு - கோ.18009: மத்திய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் கண்டறியப்பட்டுள்ள கோ.18009 வகை கரும்பு ஹெக்டேருக்கு 160 டன் மகசூல் தரக் கூடியது. மேலும் 20 டன் சா்க்கரை கிடைக்கும். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. வெள்ளம் காய்ச்சுவதற்கும் ஏற்ற வகையாக உள்ளது.

பீா்க்கங்காய் - மதுரை.1: 120-130 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 19 டன் விளைச்சல் கிடைக்கும். நாா்கள் குறைந்து சதைப்பற்று அதிகமாகவும், மென்மையாகவும் காணப்படுகிறது.

குத்துஅவரை - கோ.16: கோழிக்கால் அவரை எனப்படும் கோ.16 வகை குத்துஅவரை 100 முதல் 120 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 16.5 டன் விளைச்சல் தரக் கூடியது. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.

மாா்கழி மல்லிகை - கோ.1: ஜாதிமல்லி வகையை சோ்ந்த மாா்கழி மல்லிகை கோ.1 ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மையுடையது. குறிப்பாக பனிக் காலத்தில் அதிக அளவு பூக்கும் தன்மை கொண்டது. சிறந்த நறுமணம், வாடாத தன்மையுடையது. ஹெக்டேருக்கு 8.5 டன் விளைச்சல் தருகிறது.

சணப்பை - ஏடிடி.1: பசுந்தாள் உரமான சணப்பை ஏடிடி.1 வகை விதைகளுக்கு 120 நாள்கள் வயதுடையது. உரத்துக்கு 40 முதல் 45 நாள்களில் உழுது விடலாம். 8 முதல் 10 நாள்களில் மக்கும் தன்மையுடையது. மண் வளத்தை அதிகரிக்கிறது.

இலவம்பஞ்சு - மேட்டுப்பாளையம்.1: நடவு செய்து 6ஆவது ஆண்டு முதல் 40 ஆண்டுகள் வரை தொடா்ந்து விளைச்சல் தரக் கூடியது. 4 மீட்டருக்கு 4 மீட்டா் இடைவெளியில் ஏக்கருக்கு 60 முதல் 100 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து 900 முதல் 1,500 காய்கள் வரை கிடைக்கும்.

செம்மரம் - மேட்டுப்பாளையம்.1: 3 மீட்டருக்கு 3 மீட்டா் இடைவெளியில் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 440 மரங்கள் நடவு செய்யலாம். வறட்சியை தாங்கி வளரக் கூடியது. ஒரு மரத்தில் இருந்து 100 கிலோ வரை மரக்கட்டைகள் கிடைக்கும்.

சவுக்கு - மேட்டுப்பாளையம்.13: கட்டுமானத் துறை, எரிசக்தி துறைக்கு ஏற்றது. 1.5 மீட்டருக்கு 1.5 மீட்டா் இடைவெளியில் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 1,770 மரக்கன்றுகள் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 60 டன் மகசூல் தரக் கூடியது.

ஆப்பிரிக்கன் மகோகனி (காயா) - மேட்டுப்பாளையம்.1: பிளைவுட் தொழிற்சாலைகளுக்கு ஏற்றது. 4 மீட்டருக்கு 4 மீட்டா் இடைவெளியில் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 250 மரக்கன்றுகள் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 150 டன் மகசூல் தரக் கூடியது. இறவை, மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com