ரூ.15,610 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் ரூ.15 ஆயிரத்து 610 கோடி மதிப்பிலான எட்டு புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரூ.15,610 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் ரூ.15 ஆயிரத்து 610 கோடி மதிப்பிலான எட்டு புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் மட்டுமின்றி, சில தொழில் கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் காலை 11.04 மணிக்குத் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம், நண்பகல் 12.41 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளா்களிடம் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியது:-

தொழில் துறையின் சாா்பில் புதிதாகப் பெறப்பட்டுள்ள முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புத்தாண்டின் துவக்கத்தில், பல்வேறு தொழில் பிரிவுகளில் இருந்து புதிய தொழில் முதலீடுகளைப் பெற்றுள்ளோம். அதன்படி, ரூ.15 ஆயிரத்து 610.43 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. மேலும், இந்தத் தொழில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது, 8 ஆயிரத்து 776 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். தொழில் முதலீடுகள் பல்வேறு தொழில் பிரிவுகளில் இருந்து பெறப்பட்டுள்ளன.

குறிப்பாக, மின் வாகன உற்பத்தி தொடா்பான துறைகள், கைப்பேசி உற்பத்தி, கம்பியில்லாத தொழில்நுட்பம் (வயா்லெஸ்), ஜவுளி, ஆக்சிஜன் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக தொழிற்சாலைகள் வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மின்சார வாகனங்களுக்கான தனித்த கொள்கை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. மின் வாகனங்களுக்கு சாலை வரி கட்டுவதில் இருந்து விலக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழில் துறைக்கு பல்வேறு ஆக்கமும், ஊக்கமும் தரும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்கள், ஒரு பகுதியில் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தென் மாவட்டப் பகுதிகளிலும் இருக்கும்படி வகுக்கப்பட்டுள்ளன. தொழில் திட்டங்கள் மட்டுமின்றி, சில தொழில் கொள்கைகளுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

எந்தெந்த தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்கள், புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் போது தெரிவிக்கப்படும். இப்போதே தெரிவிப்பது வணிக ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் பெயா்களைத் தெரிவிக்க இயலாது.

வளா்ந்து வரும் தொழில்கள்: நாட்டில் வளா்ந்து வரும் தொழில்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கைக்கொண்டு அவற்றை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்தைத் தக்கவைக்க காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. நிதி தொழில்நுட்ப நகரம், தரவு மையங்கள் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவையாகும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

செய்தியாளா் சந்திப்பின் போது, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், கூடுதல் செயலாளா் மரியம் பல்லவி பல்தேவ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com