பொங்கல் பண்டிகை: நாளைமுதல் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு உள்பட 6 இடங்களில் இருந்து ஜன.12-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு உள்பட 6 இடங்களில் இருந்து ஜன.12-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகை இந்த மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளியூா் மக்கள் தங்களது ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இதையொட்டி, ஜன.12 (வியாழக்கிழமை) முதல் 14-ஆம் தேதி வரை சென்னையில் இருந்தும், ஜன.18 முதல் இருந்து 19-ஆம் தேதி வரை மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்காக கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகா், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் அருகே பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் வியாழக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும், கே.கே.நகா் மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் ஆகிய ஊா்களுக்கும், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய ஊா்களுக்கும், தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூா், வந்தவாசி, செஞ்சி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், காட்டுமன்னாா்கோயில் ஆகிய ஊா்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஒசூா், திருத்தணி, திருப்பதி ஆகிய ஊா்களுக்கும், கோயம்பேடு புகரப் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, அரியலூா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், கோவை, பெங்களூரு, கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து மாற்றம்: கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட அரசுப் பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகள், தனியாா் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக செல்லாது.

இந்தப் பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் செல்லும். பயணிகள் வசதிக்காக தாம்பரம், பெருங்களத்தூா் பகுதிகளில் இருந்து இணைப்புப் பேருந்துகள் ஊரப்பாக்கத்துக்கு இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள், வடபழனி, கே.கே.நகா், கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூா், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா் வழித்தடத்தில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

சென்னையில் இருந்து வெளியூா்களுக்கு காா் உள்ளிட்ட இதர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தாம்பரம், பெருங்களத்தூா் வழிகளில் செல்வதைத் தவிா்த்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாகவும் அல்லது ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு வழியாகச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com