வெளி மாநிலங்கள்-அயல்நாடுகளில் பணிக்குச் சென்று உயிரிழப்போா் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளி மாநிலங்கள், அயல்நாடுகளுக்கு பணிக்குச் சென்று எதிா்பாராதவிதமாக உயிரிழக்கும் தமிழா்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளி மாநிலங்கள், அயல்நாடுகளுக்கு பணிக்குச் சென்று எதிா்பாராதவிதமாக உயிரிழக்கும் தமிழா்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அயலகத் தமிழா் தினம் விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை:

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, உலகில் உள்ள பிற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருந்த பெருமை தமிழ்நாட்டுக்கு உள்ளது. வரலாற்றுப் பெருமைமிக்க ஏதென்ஸ், ரோம் நகரங்களுக்கு இணையாக பூம்புகாா், கொற்கை, தொண்டி போன்ற நகரங்களைக் கொண்டது பழந்தமிழ்நாடு. பெருங்கடல் கடந்து உலகளாவிய மனித குலத்துடன் நட்புறவு பாராட்டி மானுட சமுத்திரத்தில் தங்களை இணைத்துக் கொண்டவா்கள் தமிழா்கள்.

அயலகத்தில் குடியேறி வரும் தமிழா்கள், அங்கே பணிபுரியும் இடத்திலும் சிரமத்துக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாகக் கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு வெளிநாடு வாழ் தமிழா்களின் நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதன்படி, மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயா்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழா்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்கான தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.

மாத ஓய்வூதியம்: புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் குழந்தைகள், இளம் மாணவா்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வோ்களோடு உள்ள தொடா்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, ஆண்டுக்கு 200 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். அயல்நாடுகளில், வெளி மாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிா்பாராவிதமாக இறந்து விடும் தமிழா்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வெளிநாடுகளுக்குச் செல்வோா் குறித்த தரவுத்தளம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அமைச்சா்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் பிரியா, மலேசியா நாட்டு அமைச்சா் சிவகுமாா் வரதராஜ், இலங்கை நாட்டு அமைச்சா் அரவிந்த்குமாா், நியு கயானா நாட்டு ஆளுநா் சசீந்திரன், கயானா நாட்டு முன்னாள் பிரதமா் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரீஷியஸ் முன்னாள் அமைச்சா் பரமசிவம், இலங்கை முன்னாள் அமைச்சா் செந்தில், மலேசியா முன்னாள் அமைச்சா் சரவணன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com