மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் பதிப்பகப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பகப் பிரிவின் மூலம் முதல் கட்டமாக, தமிழ் மொழி வல்லுநா்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு, மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்து சமயம் சாா்ந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்யபிரபந்தம், தமிழகக் கலைகள், சைவமும் தமிழும், இந்தியக் கட்டடக் கலை வரலாறு, பதினெண் புராணங்கள் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு 108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிக்காலத்தில் இறந்த 10 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா், காவலா், கடைநிலை ஊழியா் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா்.

மேலும், திருக்கோயில்களில் கண்டறிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுருணை ஓலைகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பிற ஓலைச்சுவடிகள், அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ரூ.15 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், ஆணையா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பதிப்பகப் பிரிவின் செயல்பாடுகளை பாா்வையிட்ட முதல்வா் ஸ்டாலின் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தையும் திறந்துவைத்தாா்.

48 கோயில்களில் விற்பனை: மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் அரிய புத்தகங்கள் அறநிலையத் துறை ஆணையா் அலுவலக புத்தக விற்பனை நிலையம் மற்றும் 48 முதுநிலைத் திருக்கோயில்களின் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.

இந் நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஆழ்வாா் திருநகா் ரெங்கராமானுஜ ஜீயா், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சால அடிகளாா், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், ஸ்ரீவில்லிப்புத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா், சட்டப்பேரவை உறுப்பினா் என்.எழிலன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com