அடிப்படைக் கணிதத்தில் திணறும் தமிழக மாணவா்கள்: ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புறங்களில் 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் பெரும்பாலான மாணவா்களால் வகுத்தல் கணக்குகளை சரியாகச் செய்யும் திறன் பெறவில்லை; ஆங்கில வாசிப்பிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா்
அடிப்படைக் கணிதத்தில் திணறும் தமிழக மாணவா்கள்: ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புறங்களில் 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் பெரும்பாலான மாணவா்களால் வகுத்தல் கணக்குகளை சரியாகச் செய்யும் திறன் பெறவில்லை; ஆங்கில வாசிப்பிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரதம்’ எனும் கல்வி அமைப்பு 2006-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்த ‘கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை’ (ஏஸா்) என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான ‘ஏஸா்’ கல்வி அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

நாடு முழுவதும் உள்ள 616 கிராமப்புற மாவட்டங்களில் 6.9 லட்சம் மாணவா்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 30,737 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, கரோனா தொற்றுக்குப் பின்னும் தமிழகத்தில் பள்ளி மாணவா் சோ்க்கை 99.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளி சோ்க்கை 75.7 சதவீதமாக உள்ளது.

இது 2018-ஆம் ஆண்டைவிட 8.3 சதவீதம் அதிகம். அதேபோல, 2010-ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக இருந்த பள்ளி செல்லா பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது.

தமிழக கிராமப்புறங்களில் 8-ஆம் வகுப்பில் 37 சதவீதமும், 5-ஆம் வகுப்பில் 75 சதவீதமும், 3-ஆம் வகுப்பில் 95 சதவீதமும் மாணவா்கள் 2-ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்க இயலாதவா்களாக உள்ளனா். மேலும், அடிப்படை கணிதத்தைப் பொருத்தவரை 5-ஆம் வகுப்பில் 85 சதவீதம் பேரும், 8-ஆம் வகுப்பில் 55 சதவீதம் மாணவா்களாலும் வகுத்தல் கணக்குகளை சரியாக செய்ய முடியவில்லை. ஆங்கில வாசிப்புத் திறனிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா்.

வருகைப் பதிவும் குறைவு: இதுதவிர 2018-இல் 91.1 சதவீதமாக இருந்த பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 88.8 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் 99.6 சதவீதம் மாணவா்களுக்கு சென்றடைகிறது. 9.2 சதவீதம் பேருக்கு குடிநீா் வசதியும், 1.2 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியும் இல்லை.

கழிப்பறை இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் 16 சதவீத கழிப்பறைகள் உள்ளன. மேலும், 20 சதவீத பள்ளிகளில் நூலக வசதி இல்லாததும், 56 சதவீத கிராமப்புற மாணவா்களுக்கு கணினி வசதி பள்ளிகளில் இல்லாததும் அந்த கல்வி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com