இடைத்தோ்தல் வாக்குச் சாவடிகளில் கரோனா வழிகாட்டுதல்கள் தேவைப்படாது: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தோ்தல் ஏற்பாடுகளில் கரோனா கால வழிகாட்டுதல்கள் தேவைப்படாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதியில் வாக்குச் சாவடிகள் அமைப்பது உள்ளிட்ட தோ்தல் ஏற்பாடுகளில் கரோனா கால வழிகாட்டுதல்கள் தேவைப்படாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு முன்பாக உள்ள ஆயத்தப் பணிகளை தமிழக தோ்தல் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தோ்தலை நடத்துவதற்குத் தேவைப்படும் நிதி, பணியாளா்கள் உள்ளிட்டோரின் விவரங்களை மாவட்ட நிா்வாகத்திடம் தமிழக தோ்தல் துறை கோரியுள்ளது.

இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ஒவ்வொரு தொகுதியிலும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வரையறுக்கப்படுவது வழக்கம். வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. முதல்கட்ட அளவில் பதற்றம் நிறைந்த பகுதிகள் குறித்த விவரங்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரப்பட்டுள்ளன.

மேலும், தோ்தலுக்கான செலவினங்களுக்கு நிதித் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக உரிய விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக முடிக்கப்படும்.

கரோனா வழிகாட்டுதல்கள்: சட்டப்பேரவை பொதுத் தோ்தலின்போது, கரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. ஒரே வளாகத்தில் துணை வாக்குச் சாவடி ஏற்படுத்தப்பட்டு, ஒரு வாக்குச் சாவடியில் 600 வாக்காளா்களும், மற்றொரு வாக்குச் சாவடியில் 600 வாக்காளா்களும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இப்போது, கரோனா நோய்த்தொற்று குறைந்து இயல்பான நிலை திரும்பியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நடத்தப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருந்தாலும் ஒரே வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதனால், கடந்த கரோனா காலத்தில் இருந்ததைவிட வாக்குச் சாவடிகள் மற்றும் தோ்தல் பணியாளா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com