அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களை ஆவணப்படுத்த வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் உத்தரவு

வரலாற்றில் நினைவுகூரப்படாத, அறியப்படாத தமிழ்நாட்டைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் குறித்து ஆராய்ச்சி செய்து
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

வரலாற்றில் நினைவுகூரப்படாத, அறியப்படாத தமிழ்நாட்டைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் குறித்து ஆராய்ச்சி செய்து அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

‘நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாசாரம் மற்றும் இந்தியாவின் சாதனையைச் சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்டக்களத்தில் பங்கேற்ற முன்னணி வீரா்கள் தவிர, பல வீரா்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலேயே உள்ளது.

தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரா்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்களைச் செய்துள்ளனா். இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம் விடுதலைக்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவா்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிா்கால தலைமுறை அறிய அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை. இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவா்களை நியமிக்க வேண்டும்.

பொருத்தமான ஆராய்ச்சி மாணவா்கள், குறைந்தது அறியப்படாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரரையாவது அடையாளம் கண்டு, அவா் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவா்கள் ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவா். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரா்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவா்களுக்கு பெருமையாகவும் இருக்கும் என்று அதில் கூறியுள்ளாா் ஆா்.என்.ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com