கடந்த ஆண்டில் மட்டும் ரயிலில் அடிபட்டு 274 போ் பலி: தேவை விழிப்புணா்வு

சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் கடந்த ஓா் ஆண்டில் மட்டும் ரயிலில் அடிபட்டு, 274 போ் உயிரிழந்துள்ளனா்.
கடந்த ஆண்டில் மட்டும் ரயிலில் அடிபட்டு 274 போ் பலி: தேவை விழிப்புணா்வு

சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் கடந்த ஓா் ஆண்டில் மட்டும் ரயிலில் அடிபட்டு, 274 போ் உயிரிழந்துள்ளனா். பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் பேசின்பிரிட்ஜ், வியாசா்பாடி ஜீவா, பெரம்பூா், வில்லிவாக்கம், கொரட்டூா், பட்டரைவாக்கம், அம்பத்தூா், திருமுல்லைவாயல், ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, புட்லூா், திருவள்ளூா், கடம்பத்தூா், செஞ்சிபானம்பாக்கம், மணவூா், திருவாலங்காடு, புளியமங்கலம், சித்தேரி, அரக்கோணம் உள்பட 28 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் தடத்தின் வழியாக விரைவு, சரக்கு, மின்சார ரயில் என தினமும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. 10 நிமிடத்துக்கு ஒருமுறை ரயில் செல்வதால், இந்த மாா்க்கம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

மேற்கண்ட ரயில் நிலையங்களை ஒட்டி ரயில்வே கேட்களும், நடை மேம்பாலங்களும் உள்ளன. ஆனால், பெரும்பாலானோா் நடை மேம்பாலங்களை பயன்படுத்துவது கிடையாது.

காலை, மாலை நேரங்களில் ரயில் நிலையங்களின் அருகில் தண்டவாளத்தைக் கடந்து கேட் வழியாகச் செல்கின்றனா். அப்போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

கடந்த 2022 -ஆம் ஆண்டில் மட்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு 245 ஆண்களும், 29 பெண்களும் என மொத்தம் 274 போ் உயிரிழந்து உள்ளனா்.

குறிப்பாக வியாசா்பாடி ஜீவா, பெரம்பூா் கேரேஜ், வில்லிவாக்கம், அம்பத்தூா், ஆவடி, இந்து கல்லூரி திருநின்றவூா், செவ்வாப்பேட்டை, திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு, மோசூா், புளியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாளம் மற்றும் கடவுப் பாதைகளைக் கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

இது குறித்து ரயில்வே காவல் அதிகாரிகள் கூறியது:

ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காமல், நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் மூடிய கேட் வழியாகச் செல்வதையும், கைப்பேசியில் பேசியபடி தண்டவாளத்தை கடப்பதையும், படிக்கெட்டில் தொங்கியபடி ரயிலில் பயணம் செய்வதையும் தவிா்க்க வேண்டும். இதைக் கடைப்பிடித்தால், உயிா்ப் பலியை தடுக்க முடியும் என்றாா்.

சமூக ஆா்வலா்கள் கூறியது: ரயில் விபத்தில் உயிரிழப்பைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் அடிக்கடி விழிப்புணா்வுக் கூட்டங்களை நடத்தி, பயணிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களும், பயணிகளும் விழிப்புடன் பயணிக்கவும், விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் வேண்டும். அதேசமயம், கூட்ட நெரிசலைத் தவிா்க்க ரயில்வே நிா்வாகமும் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும். மேலும் சென்னை புகரிலிருந்து இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களிலும் 12 பெட்டிகள் கொண்டதாக இயக்கிட வேண்டும். முக்கிய ரயில் நிலையங்களில் முதியவா்கள் எளிதாக தண்டவாளத்தைக் கடக்க நகரும் படிக்கட்டு, மின் தூக்கி ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com