செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தொடரப்பட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தொடரப்பட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
 அமலாக்கத் துறை தரப்பில் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்ட போதிலும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியது.
 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்த நிலையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரரான செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் இந்த விவகாரம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி முன்வைத்த வாதம்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மூன்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதால், தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
 இந்த உத்தரவு நிபந்தனைக்குள்பட்டதாக உள்ளது. இந்த நிபந்தனைகள் ரிமாண்ட்டை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. மேலும், சட்டத்தின்படி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆள்கொணர்வு மனுவே நிலைக்கத்தக்கதல்ல. இதனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதே சட்டவிரோதமாகும்.
 மேலும், உயர்நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறையானது ராகுல் மோதி என்பவர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக உள்ளது. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய அனுமதித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவு அமலாக்கத் துறையின் விசாரணைக் காவலை அர்த்தமற்றதாக்கிவிட்டிருக்கிறது.
 அனுபம் ஜெ. குல்கர்னி என்பவர் வழக்கில் போலீஸ் காவலானது கைதான முதல் 15 நாள்களுக்கு மேல் அளிக்கப்பட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலவிட்ட நாள்களை முதல் 15 நாள் காலத்தில் சேர்க்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் குறுக்கீடு காரணமாக, அமலாக்கத் துறை விசாரணை உரிமையைப் பயன்படுத்த முடியாத ஒரு வழக்காக இது இருக்கிறது என்றார் அவர்.
 அப்போது, நீதிபதிகள் அமர்வு, "உங்களது காவலில் எடுக்கும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது. அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அந்த நபர் நோயிலிருந்து குணமடையும் நாள் வரை அதை ஒத்திவைக்க வேண்டுமா அல்லது தள்ளிப்போட வேண்டுமா என்பதுதான் ஒரே கேள்வி' என்று கூறியது.
 செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞர் நீரஜ் கிஷன் கௌல் ஆஜராகி வாதிடுகையில்,"செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் நான்கு அடைப்புகள் இருந்தன. தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிலையில் உள்ளார்' என்றார். மேலும், "தானாகவே அவர் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டதாக கூறுவது தவறு. அவர் அரசு மருத்துவர்களின் குழுவால் பரிசோதிக்கப்பட்டார்' என்று வாதிட்டார்.
 இரு தரப்பு வாதத்துக்குப் பிறகு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: ஆள்கொணர்வு மனுவின் நிலைக்கத்தக்கத் தன்மை, கைதான நபரின் சிகிச்சை காலத்தை காவலில் வைக்கப்பட்டுள்ள விசாரணை காலத்திலிருந்து விலக்குதல் போன்ற விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் இறுதிக் கருத்தை தெரிவிக்கவில்லை.
 இந்த இரண்டு விவகாரங்களும் உயர்நீதிமன்றம் நிர்ணயித்த விசாரணை தேதியில், அதாவது ஜூன் 22 அல்லது விரைவில் ஆராயப்பட வாய்ப்புள்ளதால், இந்த மேல்முறையீட்டு மனுக்களை மேலதிக விசாரணைக்காக ஜூலை 4-ஆம் தேதி பட்டியலிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.
 இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பது, உயர்நீதிமன்றத்தின் முன் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ள விவகாரத்தை ஒத்திவைப்பதற்கான ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளப்படாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
 மேலும், உயர்நீதிமன்றம் ஜூன் 15-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தெரிவித்த கருத்துகள் அல்லது உச்சநீதிமன்றத்தின் விசாரணையின் போது ஏதேனும் வாய்மொழியாக தெரிவித்த கருத்துகளால் இந்த வழக்கின் தகுதியில் எந்தத் தாக்கமும் இருக்காது என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவில் தெரிவித்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com