கரோனா தடுப்பூசி செலுத்தியவருக்கு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்படாதா?: பிரபல மருத்துவர் பதில்

நாடு முழுவதும் சமீப காலமாக இன்ஃப்ளூயன்சா-ஏ வகை திரிபு வைரஸ் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது. 
கரோனா தடுப்பூசி செலுத்தியவருக்கு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்படாதா?: பிரபல மருத்துவர் பதில்

நாடு முழுவதும் சமீப காலமாக இன்ஃப்ளூயன்சா-ஏ வகை திரிபு வைரஸ் தொற்று பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது. 

குளிர்காலம் மற்றும் பருவமழைக் காலம் நிறைவடைந்தபோதிலும், தொடர்ந்து இந்த காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக நாளுக்குநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

சோதனை முடிவில் கரோனா பாதிப்போ அல்லது பன்றிச் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் இன்ஃப்ளூயன்சா-ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காய்ச்சல், இருமல், சளி ஒருபக்கம் இருக்க, மறுபுறம் கண்மூடித்தனமான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. 

பருவகால காய்ச்சல் ஐந்து முதல் ஏழு நாள்கள் நீடிக்கும். காய்ச்சல் மூன்று நாள்களுக்குப் பிறகு குறைந்துவிடும். ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். 

காற்று மாசுபாடு காரணமாக வைரஸ் தொற்று அதிகரித்துள்ளன. இது பெரும்பாலும் 15 வயதுக்குள்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. காய்ச்சலுடன் ஒருசிலருக்கு நுரையீரல் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. 

இன்ஃப்ளூயன்சா வைரஸுக்கான அறிகுறிகள்? 

இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதீத காய்ச்சல் ஏற்படும், தொண்டை வலி, விடாத வறட்டு இருமல், குமட்டல்/வாந்தி, உடல் வலி/சோர்வு தலைவலி போன்றவை வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும். 

யாருக்கெல்லாம் இந்த வைரஸ் அதிகம் தாக்கும்?

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் நோய் வெளிப்பட வாய்ப்பு உண்டு. 

மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், அதி தீவிர காய்ச்சல், நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்படுதல், எதையும் விழுங்கமுடியாது நிலை, தலைச்சுற்றல், வலிப்பு போன்றவை அபாய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பல்ஸ் ஆக்சிஜன் மூலம் அடிக்கடி ஆக்சிஜன் அளவுகளை சோதித்துக்கொள்ளலாம். மேற்கொண்ட பாதிப்புகள் இருப்பவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை நாடலாம். 

சிலர் வீட்டிலேயே சுய மருத்துவத்தை எடுத்துக்கொண்டு, அதிக ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வர். ஒரு சில வைரஸுக்கு அதற்குண்டான மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஒருசில நேரத்தில் வீட்டு வைத்தியம் ஆபத்தில் சென்று முடியும். நேரத்தை வீணடிப்பதற்குச் சமம். 

இந்த காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை சற்று தள்ளிப்போடுவது சிறந்தது. முதியவர்கள், குழந்தைகள் காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்படும்போதே அதைத் தள்ளிப்போடாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். 

எதிர்ப்புச் சக்தி குன்றிய முதியோர், குழந்தைகள் கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். அப்படியே அவசியமாக செல்லவேண்டும் எனில் முகக்கவசத்தை பயன்படுத்தலாம். 

தொற்று ஏற்பட்டுக் காய்ச்சலுடன் இருப்பவர்கள் காய்ச்சல் குணமாகும் வரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். கைகளை சோப் போட்டு அடிக்கடி கழுவுதல், எச்சிலை பொது இடங்களில் துப்பாமல் இருத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்கலாம். 

ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகத் திரிபு அடைந்துவரும் இந்த ப்ளூ வைரஸ்களுக்கு எதிராக முதியோர்கள், எதிர்ப்புச் சக்தி குன்றியோர்கள் ப்ளூ வைரஸுக்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் தீவிர தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால், குளிர்ந்த நீரில் உடல் முழுவதும் ஒத்தி எடுப்பது, நீர்ச்சத்து நிரம்பிய ஆகாரங்களை உட்கொள்ளுதல், ஓ.ஆர்.எஸ் திரவத்தைப் பருகுதல், நல்ல ஓய்வு ஆகியவை இந்த தொற்றிலிருந்து விரைவில் மீள உதவும். 

இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் குறித்து சிவகங்கை பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா முகநூலில் பதிவு எழுதியுள்ளார். அதில், 

கோவிஷீல்ட் தடுப்பூசி 3 முறை போட்டுக்கொண்டவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட வைரசிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:

இந்த வைரஸ் இன்ஃப்ளூயன்சா வகை, கோவிஷீல்டு - கரோனா வைரஸுக்கு எதிரானது. எனவே கோவிஷீல்டு தடுப்பூசி இந்த தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு வழங்காது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com