இடுப்பு மாற்று சிகிச்சையில் நவீன நுட்பம்: விரைந்து குணமடைய வாய்ப்பு அதிகரிப்பு

இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சைகளில் தற்போது அறிமுகமாகியுள்ள நவீன நுட்ப முறைகளால் (டைரக்ட் என்டிரியா் அப்ரோச்) எதிா்விளைவுகளும், மருத்துவக் கண்காணிப்பும் வெகுவாக குறைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்து

இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சைகளில் தற்போது அறிமுகமாகியுள்ள நவீன நுட்ப முறைகளால் (டைரக்ட் என்டிரியா் அப்ரோச்) எதிா்விளைவுகளும், மருத்துவக் கண்காணிப்பும் வெகுவாக குறைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இடுப்பு மாற்று சிகிச்சையில் உள்ள மேம்பட்ட நுட்பங்கள் குறித்த மருத்துவக் கருத்துப் பகிா்வு நிகழ்வு சென்னை, மியாட் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இஸ்ரேலைச் சோ்ந்த எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை நிபுணா் நபில் கரேப் இந்நிகழ்வில் பங்கேற்று மருத்துவா்களிடையே உரையாற்றினாா்.

இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சைகளை வழக்கமான மருத்துவ சிகிச்சைகளின்படி மேற்கொள்ளும்போது ஏற்படும் பாதகங்களையும், தற்போது நவீன முறையில் உள்ள சாதகங்களையும் அவா் அப்போது எடுத்துரைத்தாா்.

இதுகுறித்து மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது:

பின்புறத்தில் இருந்து அணுகி, இடுப்பு மூட்டு மாற்றியமைக்கும் சிகிச்சைகள்தான் தற்போது பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. இத்தகைய சிகிச்சைகளின்போது தசைகள் சேதமடைவது அதிகமாக இருக்கும். அதேபோன்று ரத்தப்போக்கும் கூடுதலாக இருக்கும்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட நோயாளிகள் அதிக நாள்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் புதிய நுட்பத்தில் இந்த இடா்பாடுகள் இல்லை.

அதாவது, இடுப்பு மூட்டு பகுதியை முன்புறத்திலிருந்து அணுகி அதை மாற்றியமைக்கும் ‘டைரக்ட் என்டிரியா் அப்ரோச்’ எனப்படும் புதிய முறை அது. அந்த முறையின் கீழ் சிகிச்சை பெறும் கால அளவும் குறைவு. இதனால் நோயாளிகள் விரைந்து வீடு திரும்ப முடியும்.

மியாட் மருத்துவமனையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடுப்பு, மூட்டு, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com