
கள்ளச்சாராயமும், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது போலி மது, கள்ளச்சாராய இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் அவர் மனு அளித்தார். பழனிசாமியுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உடனிருந்தனர்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று அதிமுகவினர் இந்த மனுவை அளித்தனர். இதனால் சென்னையில் ஒருசில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன.
நாங்கள் அளித்துள்ள புகார் மனுக்களை பரிசீலனை செய்வதாக ஆளுநர் கூறியிருக்கிறார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். கள்ளச்சாராய உயிரிழப்புகள், விஏஓ வெட்டிக்கொலை உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறியுள்ளோம். நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் திமுக அரசில் பாதிக்கப்படுகின்றனர். வேங்கைவயல் வழக்கில் இதுவரை ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்யவில்லை.
கள்ளச்சாராயமும், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்கப்படுகிறது. போலி மதுபானத்தால் இறந்ததை மறைக்க அரசு அதிகாரிகள் மூலம் தவறான தகவல்கள் பரப்ப முயற்சிக்கிறது. தஞ்சையில் போலி மதுபான விற்பனை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. ரௌடிகள், குற்றவாளிகள், திருடர்கள் காவல்துறையினருக்கு அச்சப்படுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.