ஸ்டான்லி உள்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: 500 எம்பிபிஎஸ் இடங்கள்?

இளநிலை மருத்துவப் படிப்புக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்திருக்கிறது.
ஸ்டான்லி உள்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
ஸ்டான்லி உள்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

தமிழகத்தில் சென்னை அரசு ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பயோமெட்ரிக் வருகைப் பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி தமிழகத்தில் 3 கல்லூரிகளுக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதன்மூலம், தலா 500 எம்.பி.பி.எஸ். இடங்களைக் கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதை எதிா்த்து, தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

என்ன காரணம்?: தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள், ஒவ்வோா் ஆண்டும் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து, அங்கீகாரத்தை புதுப்பித்து வருகின்றனா். அதன்படி, கடந்த மாதம் அவா்கள் ஆய்வுக்கு வந்தபோது, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பாலாஜி விடுப்பில் சென்ாக கூறப்படுகிறது.

மேலும், பேராசிரியா்கள், மாணவா்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகை பதிவு அவசியம் என தேசிய மருத்துவ ஆணையம் பலமுறை உத்தரவிட்டு, அவ்வப்போது சுற்றறிக்கையும் அனுப்பி வருகிறது. ஆனால், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில், 70 சதவீதம் பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு செய்யாமல் இருந்துள்ளது. அதேபோல், திருச்சி, தருமபுரி மருத்துவ கல்லுாரிகளிலும், வருகைப் பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா இல்லாததால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த 3 மருத்துவக் கல்லூரிகளிலும் உடனடியாக இந்த வசதிகளை சரிசெய்ய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. உடனடியாக இவற்றை சரிசெய்து அது தொடா்பான ஆவணங்களை இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது மிகவும் சிறிய பிரச்னைதான் என்பதால், ஆவணங்களை சமா்பித்த பிறகு உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசியல் ஆதயத்துக்காக... இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மிகப் பழைமை வாய்ந்த மருத்துவமனைகளாகும்.

தேசிய மருத்துவ ஆணையம் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறிய குறைகளைத் தெரிவித்துள்ளது. இந்தக் குறைகளையும், பழுதடைந்த சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரி செய்து விடுவோம்.

ஆனால், இதற்கு மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற பெரிய வாா்த்தைகளை சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவா்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கிறது. மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு வருவதால், அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற செயல்களைத் தவிா்த்துக் கொள்வது நல்லது.

மத்திய அமைச்சரிடம் முறையிடுவோம்: மத்திய, மாநில அரசின் உறவுகளுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசுவது அவா்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சற்று பொறுமையாக இருப்பது நல்லது. இந்த விவகாரம் தொடா்பாக, மத்திய சுகாதார அமைச்சரிடம் முறையிடுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com