எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - எஸ். பாலச்சந்திரன் பேட்டி

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ். பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று(செவ்வாய்க்கிழமை) உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று(புதன்கிழமை) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 

தற்போது இது விசாகபட்டினத்திற்கு கிழக்கே சுமார் 510 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது முதலில் மேற்கு - வடமேற்கு திசையிலும் பின்னர் கிழக்கு - வடகிழக்கு திசையிலும் நகா்ந்து நவ.17-இல்  ஒடிஸா கடற்பகுதியில் நிலவக்கூடும்.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று  தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகப் பகுதியில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த இரு தினங்களுக்கு மன்னாா் வளைகுடா, குமரி கடற்கரைப் பகுதிகளில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரையிலும் காற்று வீசக்கூடும்.

அடுத்த 3 தினங்களுக்கு மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரையிலும் காற்று வீசக்கூடும். 

ஆகவே, மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com