
கோப்புப்படம்
தமிழ்நாட்டில் 2008 முதல் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 9% சிகிச்சைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், தமிழ்நாட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் 10,000- க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 900 சிகிச்சைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன என்று தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கூறியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து மொத்தம் 1,683 உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 1,361 உறுப்புகளை தனியார் மருத்துவமனைகள் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,500 கல்லீரல்கள் தானம் பெறப்பட்ட நிலையில் அவற்றில் 94 மட்டுமே அரசு மருத்துவமனைகள் பெற்றுள்ளன.(சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மட்டும் 91 பெற்றுள்ளது) அதுபோல, தானம் பெறப்பட்ட 780 இதயங்களில் 26 இதயங்கள், அரசு மருத்துவமனைகளும் அவற்றில் 14 - சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையும் 10 இதயங்களை ஓமந்தூரார் மருத்துவமனையும் 2 இதயங்களை மதுரை அரசு மருத்துவனையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க | நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் டிக்கெட் நகலைப் பகிருங்கள்: ஏ.ஆர். ரஹ்மான்
இதனால், அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை அதிகப்படுத்த மாநில அரசு ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் ஏழை மக்களைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், 'மொத்தமுள்ள 900 அறுவை சிகிச்சைகளில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 90% உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அவற்றில் 13 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்ப்பட்டுள்ளது. மற்ற அரசு மருத்துவமனைகள் உடலில் இருந்து உறுப்புகளைப் பெற மட்டுமே முடியும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையில் தென் தமிழகத்தில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன' என்றார்.
இதையும் படிக்க | கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில்: விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...