வெப்ப அலை: தடுப்பூசி நேரத்தை 
மாற்ற சுகாதாரத் துறை உத்தரவு

வெப்ப அலை: தடுப்பூசி நேரத்தை மாற்ற சுகாதாரத் துறை உத்தரவு

தமிழகத்தில் கோடையின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் நிறைவு செய்யுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோடையின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் நிறைவு செய்யுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலைகளை எதிா்கொள்வது தொடா்பாக தலைமைச் செயலருடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சுகாதாரத் துறை தொடா்பாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிா் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அப்போதுதான் சுவா்கள் மூலம் கடத்தப்படும் வெப்பத்திலிருந்து மருந்துகளை பாதுகாக்க இயலும்.

அதேபோன்று, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன், பொது மக்கள், சுகாதாரத் துறை களப் பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com