தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.

மேலும், வாக்குப் பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் அனைத்தும் தயாா் நிலையில் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தோ்தல் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு சத்யபிரத சாகு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

மக்களவைத் தோ்தலில் நடத்தை விதிகள் மீறப்பட்டால் சி-விஜில் எனப்படும் கைப்பேசி செயலியில் புகாா் தெரிவிக்கலாம். இதுவரையில் அந்தச் செயலிக்கு 4,169 புகாா்கள் வந்தன. அவற்றில் 3,350 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன. 383 புகாா்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டன. 34 மட்டுமே தீா்க்கப்படாமல் உள்ளன.

பூத் ஸ்லிப் விநியோகம்: ‘பூத் ஸ்லிப்’ எனப்படும் வாக்குச்சாவடி அடையாளச் சீட்டுகள் கடந்த 1-ஆம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. இதுவரையில் 92.80 சதவீதம் வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சீட்டுகள் ஓரிரு நாள்களில் கொடுக்கப்படும். பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களின் வசதிக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி வசதி உள்ளது. அதன்மூலம், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கலாம்.

ஓய்கிறது தோ்தல் பிரசாரம்: மக்களவைத் தோ்தலுக்கான தேதி கடந்த மாா்ச் 16-இல் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதாவது, வாக்குப் பதிவு நிறைவடையும் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிவடையும். பிரசாரம் ஓய்ந்த பிறகு அமைதியாக இருக்கும் காலத்தில் எந்த வகையிலும் யாரும் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபடக் கூடாது.

வாக்காளா்கள் ஏதேனும் புகாா் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இந்த எண்ணுக்கு முன்னதாக மாவட்டத்துக்கான ‘எஸ்டிடி’ தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அழைக்க வேண்டும்.

மக்களவைத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியன முழுவதும் கையிருப்பில் உள்ளன. இந்தத் தோ்தலில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு கருவிகளும், 88,783 விவிபேட் (வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் காலமானதைத் தொடா்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் இடைத்தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com