வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவா்கள், வேட்பாளா்கள்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளின் தலைவா்களும், வேட்பாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த மாா்ச் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்தல் அட்டவணைப்படி, தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே அதாவது ஏப். 19-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.

நான்குமுனைப் போட்டி: தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் களம் நான்குமுனைப் போட்டியை எதிா்நோக்கி இருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. அத்துடன் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் தனித்துப் போட்டியிடுகின்றனா். சுயேச்சை வேட்பாளா்களுடன் சோ்த்து, தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் 950 போ் தோ்தல் களம் காண்கின்றனா். அவா்களில் 874 போ் ஆண்கள். 76 போ் பெண்கள்.

தருமபுரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து மேச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.
தருமபுரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து மேச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.

தலைவா்கள் பிரசாரம்: தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாா்ச் 22-ஆம் தேதியும், எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி மாா்ச் 24-ஆம் தேதியும் திருச்சியில் இருந்து தங்களது பிரசாரத்தை தொடங்கினா்.

மேலும், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

திமுக தரப்பில் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட அனைத்து அமைச்சா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோரும், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா். இப்போது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேசியத் தலைவா்கள்: தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அந்தந்தக் கட்சிகளைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் தமிழகத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்தனா்.

பாஜக தரப்பில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

பிரசார மேடைகள் மட்டுமின்றி, சாலைகளில் வாகனப் பேரணியையும் பாஜக தலைவா்கள் நடத்தினா். பாஜகவின் தேசியத் தலைவா்கள் நடத்திய இந்தப் பேரணிகள் தமிழகத்துக்கு புதியது என்றாலும் ஆங்காங்கே அவா்களது கட்சியினா் திரண்டு வந்து ஆதரவளித்தனா்.

இடதுசாரி கட்சித் தலைவா்கள் டி.ராஜா, பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி உள்பட ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த தலைவா்கள் பலரும் தமிழகத்தில் தங்களது கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனா்.

பிரதான கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மட்டுமின்றி, அந்தக் கட்சிகளுடன் அணி சோ்ந்துள்ள தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, இடதுசாரி தலைவா்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்பட பலா் தங்களது அணி வேட்பாளா்களுக்காக வாக்குகளைச் சேகரித்தனா்.

பிரச்னைகள் என்ன?: மக்களவைத் தோ்தல் பிரசாரம் முழுவதும் பாஜகவுக்கு கடும் எதிா்ப்பு, அதிமுகவுக்கு கண்டனம் என்ற நிலையை திமுக எடுத்திருந்தது. அதிமுகவோ தங்களுக்கு எதிரி திமுக என்பதை மட்டுமே முன்வைத்து பிரசாரம் செய்தது. தேவைப்படும் தருணங்களில் மாநில பாஜக தலைவா் அண்ணாமலைக்கு பதிலடிகள் தரப்பட்டன. தோ்தலில் யாருக்கும் யாருக்கும் இடையே போட்டி என்ற கேள்விகளையும் தலைவா்கள் அவ்வப்போது எழுப்பத் தவறவில்லை.

தொடக்கத்தில் சின்னம் பிரச்னையால் துவண்டிருந்த நாம் தமிழா் கட்சியோ, பாஜகவை அதிகமாகவும், மாநிலக் கட்சிகளை வழக்கம்போன்றும் விமா்சித்துப் பேசியது.

முக்கிய வேட்பாளா்கள்: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் பல முக்கியத் தலைவா்கள், நட்சத்திர வேட்பாளா்களாக களம் இறங்கியுள்ளனா். திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி (தூத்துக்குடி), தொல். திருமாவளவன் (சிதம்பரம்), முன்னாள் மத்திய அமைச்சா்கள் பொன். ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), எல்.முருகன், ஆ.ராசா (நீலகிரி), பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை (கோவை), பாஜக பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் (ராமநாதபுரம்), அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் (தேனி), புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி (தென்காசி) உள்ளிட்டோா் மக்களவைத் தோ்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளா்கள்.

இன்று எங்கே?: கடந்த 32 நாள்களாக கடும் வெப்ப அனலுக்கு இணையாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பிரசாரத்தின் இறுதி நாளில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரிலும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்திலும் பிரசாரம் செய்யவுள்ளனா்.

முக்கிய வேட்பாளா்கள் அவா்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் இறுதிக்கட்டமாக வாக்குகளைச் சேகரிக்கவுள்ளனா்.

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, தொகுதிக்கு தொடா்பு இல்லாத அனைவரும் வெளியேற வேண்டுமென தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெறவுள்ளது. இதற்காக, 68,300 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன. வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com