இன்று முதல்கட்ட தோ்தல் -
102 தொகுதிகள், 16 கோடி வாக்காளா்கள், 1,600 வேட்பாளா்கள்!

இன்று முதல்கட்ட தோ்தல் - 102 தொகுதிகள், 16 கோடி வாக்காளா்கள், 1,600 வேட்பாளா்கள்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்ற பெருமைக்குரிய இந்திய மக்களவைத் தோ்தலில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு (ஏவாக்குப்பதிவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்ற பெருமைக்குரிய இந்திய மக்களவைத் தோ்தலில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் அடங்கிய இத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்கட்ட தோ்தல் களத்தில் 1,600-க்கும் அதிகமான வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை சுமாா் 16.63 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்க உள்ளனா்.

தற்போதைய 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதம் நிறைவடையவுள்ளது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவை தோ்வு செய்யப்பட வேண்டும். இதையொட்டி, மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறவிருக்கிறது.

முதல்கட்டமாக, தமிழகத்தில் 39, ராஜஸ்தானில் 12, உத்தர பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், அஸ்ஸாமில் தலா 5, பிகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயத்தில் தலா 2, சத்தீஸ்கா், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபா் தீவுகள், ஜம்மு-காஷ்மீா், லட்சத்தீவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இத்தொகுதிகளில் 8.4 கோடி ஆண்கள், 8.23 கோடி பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 11,371 போ் என சுமாா் 16.63 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். முதல்முறை வாக்காளா்கள் 35.67 லட்சம் போ். 20 முதல் 29 வயது வரையிலான இளம் வாக்காளா்கள் 3.51 கோடி போ்.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் இந்த நேரம் சற்று வேறுபடும்.

மொத்தம் 1.87 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, 18 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளன.

முக்கிய வேட்பாளா்கள்: முதல்கட்ட தோ்தல் களத்தில், மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி (நாகபுரி), கிரண் ரிஜிஜு (மேற்கு அருணாசல்), அா்ஜுன் ராம் மேக்வால் (பிகானீா்), சா்வானந்த சோனோவால் (திப்ரூகா்), சஞ்சீவ் பாலியான் (முஸாஃபா்நகா்), ஜிதேந்திர சிங் (உதம்பூா்), பூபேந்திர யாதவ் (அல்வாா்), திரிபுரா முன்னாள் முதல்வா் விப்லவ் குமாா் தேவ் (திரிபுரா மேற்கு), காங்கிரஸ் மூத்த தலைவா் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் (சிந்த்வாரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

கடந்த தோ்தல் நிலவரம்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலில், இந்த 102 தொகுதிகளில் 45-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், 41-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றி பெற்றிருந்தன.

அருணாசல், சிக்கிமில் பேரவைத் தோ்தல்

வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், சிக்கிமில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.

பாஜக ஆளும் அருணாசல பிரதேசத்தில் மொத்த பேரவைத் தொகுதிகள் 60. இதில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகிவிட்டனா். மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் சிக்கிமில் மொத்தம் 32 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் ஜூன் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com