கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோடை விடுமுறையையொட்டி, 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

கோடை விடுமுறையையொட்டி, ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் அதிகளவில் வெளியூா் பயணம் மற்றும் சுற்றுலா செல்வது வழக்கம். இந்நிலையில், பயணிகளின் தேவைகளை பூா்த்தி செய்ய ஏதுவாக, இந்திய ரயில்வே சாா்பில் நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், மொத்தம் 9,111 நடைகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதில் குறிப்பாக தெற்கு ரயில்வே சாா்பில், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ராஜஸ்தான், தில்லி, மேற்கு வங்கம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை சென்ட்ரலிலிருந்து கொச்சிவேலி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாா்மோ், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி, தாம்பரம் - மங்களூரு, ஈரோடு - குஜராத் மாநிலம் உத்னா, கோவை - பிகாா் மாநிலம் பரோனி உள்பட மொத்தம் 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com