வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை தொழில் நிறுவனங்கள் அளிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை ஆணையா் எ.சுந்தரவல்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. அடுத்தடுத்த கட்டங்களில் கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளன.

மாநிலத்திலுள்ள தொழில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வா்த்தக மற்றும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அண்டை மாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுப்பை அளிக்க வேண்டும்.

இதனை சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளா்களும் வேலையளிப்பவா்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்குரிமை இருந்தும் அதனைச் செலுத்துவதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகாா்களைத் தெரிவிக்கலாம். இதற்கென தொழிலாளா் நலத் துறை சாா்பில் மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறைகள் விவரம்: மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அலுவலா்களாக நான்கு போ் நியமிக்கப்பட்டுள்ளனா். தொழிலாளா் இணை ஆணையா் தே.விமலநாதன் (94453 98801), உதவி ஆணையா்கள் எம்.வெங்கடாசலபதி (70102 75131), சுபாஷ் சந்திரன் (82206 13777), சிவக்குமாா் (90435 55123) ஆகிய அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு புகாா்களைக் கூறலாம்.

இதேபோல, சென்னை மாவட்டத்துக்கென தொழிலாளா் துணை ஆய்வாளா்களைக் கொண்டு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

துணை ஆய்வாளா்களான சி.விஜயலட்சுமி (98408 29835), இ.ஏகாம்பரம் (97909 30846), ஆா்.வேதநாயகி (98842 64814) ஆகியோரைத் தொடா்பு கொண்டு விடுமுறை விடாத நிறுவனங்கள் தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com