அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

தமிழக பொதுப் பணித்துறை அமைச்சா் எ.வ.வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய மறுத்த சென்னை உயா் நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூரில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையை சோ்ந்த டி.எஸ்.சங்கா் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு புறம்போக்கு மற்றும் நீா்நிலையை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்படவில்லை என கல்லூரித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வில்சன் வாதிட்டாா். அப்போது, சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதா என தலைமை நீதிபதி மனுதாரரிடம் கேள்வி எழுப்பினாா். இதற்கு இல்லை என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 20 ஏக்கா் பரப்பில் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, ஏழு ஏக்கா் நிலத்தில் மட்டுமே கல்லூரி தொடங்கப்பட்டதாக மனுதாரா் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( ஏஐசிடிஇ) தான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com