கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநங்கைகள் திருமாங்கல்யம் (தாலி) கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தியா மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் வசித்து வரும் திருநங்கைகள் கூவாகத்திலுள்ள கூத்தாண்டவரை தங்களது குலதெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். புகழ்பெற்ற இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 9-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை அரவான் கண் திறத்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திருநங்கைகள் கோயில் பூசாரிகளிடம் திருமாங்கல்யம் கட்டிக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் குவிந்தனர்.

கோயில் வாசலில் திருநங்கைகள் தங்களை புதுமணப்பெண் போல ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்டனர். கைநிறைய வளையல்கள், தலைநிறைய பூக்களைச் சூடிய திருநங்கைகள், கோயில் பூசாரிகளின் கைகளால் திருமாங்கல்யம் (தாலி) கட்டிக்கொண்டனர். பிறகு, தங்கள் கணவராக அரவானை நினைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, கோயில் வளாகம் அருகே திருநங்கைகள் கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கிராம மக்களும்..: திருநங்கைகள் போன்று, கிராம மக்களும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தங்களது வேண்டுதல் நிறைவேற கோயில் பூசாரியிடம் திருமாங்கல்யம் கட்டிக்கொண்டு வழிபட்டனர். மேலும், திருநங்கைகள், பொதுமக்கள் தங்களது வேண்டுதல்களுக்காக கோழிகளை வழங்கினர்.

தீவிர கண்காணிப்பு: குற்றச் செயல்களைக் கண்காணிக்கும் வகையில் கோயில் வளாகப் பகுதிகள், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா தலைமையில், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகம் அருகில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன.

இன்று தேரோட்டம்: புதன்கிழமை காலை (ஏப். 24) தேரோட்டம் நடைபெறும். தேர் புறப்பாடான பின்னர், அரவானை களப்பலி கொடுத்தல், திருநங்கைகள் தங்களது திருமாங்கல்யத்தை அகற்றிக் கொண்டு, வெள்ளாடை அணிந்து விதவைக்கோலம் பூண்டு, ஊர் திரும்புதல் ஆகியவை நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com