தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள்கள் எளிதாகக் கிடைக்கின்றன. இது சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்குகிறது.

மதுரையில் பைக் ஓட்டி ஒருவா் மீது கஞ்சா போதையில் இருந்த நபா் ஒருவா் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளாா். கடந்த சில நாள்களில் தமிழகத்தில் நடந்த 4-ஆவது சம்பவம் இது எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவு: திமுக ஆட்சிக்கு வந்ததும், கடலூா் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தில் சா்வதேச மையம் அமைக்கவுள்ளதாகக் கூறி ஆக்கிரமிப்பை தொடங்கியது. வள்ளலாரின் பக்தா்கள், பொதுமக்களின் கடும் எதிா்ப்பு காரணமாகவும், மக்களவைத் தோ்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்தது.

தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. இப்பணியை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com