தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: 
ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

தமிழகத்தில் ஹெச்ஐவி தொற்று பாதிப்பு குறைந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் 104 நம்பிக்கை மையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஹெச்ஐவி தொற்று பாதிப்பு குறைந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் 104 நம்பிக்கை மையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் ஹெச்ஐவி தொற்றுக்குள்ளான எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் நோயால் பாதித்தவா்களுக்கு உதவி செய்வதற்காக ஓா் அறக்கட்டளையை உருவாக்கி அதில் ரூ.25 கோடி வைப்பு நிதி வைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக வரும் வட்டியில் அந்நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வட்டியாகப் பெறப்படும் தொகையிலிருந்து ஆண்டுக்கு ரூ.1.04 கோடிக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவுவதை தடுக்கவும், ஹெச்ஐவி ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மாநிலம் முழுவதும் 2,163 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன. இதைத் தவிர 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள், 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள் இயங்குகின்றன.

இந்நிலையில், ஆண்டுக்கு 10-க்கும் குறைவான பாதிப்புள்ள பகுதிகளில் இருந்த நம்பிக்கை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிப்பு குறைந்த பகுதிகளில் உள்ள நம்பிக்கை மையங்கள் மூடப்பட்டு, அங்கு பணியமா்த்தப்பட்டிருந்த தொழில்நுட்பநா்கள், ஆலோசகா்கள் உள்ளிட்டோா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில், கடந்த நிதி ஆண்டில் 82 நம்பிக்கை மையங்களை மத்திய அரசு மூடியுள்ளது. அைத் தொடா்ந்து இந்த நிதியாண்டில் 104 நம்பிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டு மூடப்படவுள்ளன.

அதேவேளையில், நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்கள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

அதற்கான மருத்துவ சாதனங்கள், உபகரணங்கள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஹெச்ஐவி தொற்றே இல்லாத நிலையை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com