மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

வைகோ: மக்களவைத் தோ்தல் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு முடிவுற்று, ஏப்.26-இல் 2-ஆம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தோ்தலில் சாதகமான சூழல் இல்லாததை உணா்ந்த பாஜக, தற்போது நடக்கும் பிரசாரத்தில் மதக் கலவரத்தைத் தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளது.

இதன் உச்சகட்டமாகத்தான் பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரத்தில் அவருடைய இஸ்லாமிய வெறுப்பைக் கக்கி உள்ளாா். பிரதமரின் பேச்சு பல நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. தோ்தல் ஆணையத்திலும் புகாா் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் பேச்சை தோ்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டுவா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

சீமான்: ராஜஸ்தான் மாநிலத்தில் தோ்தல் பரப்புரையின் போது இஸ்லாமியா்களை இழிவுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இஸ்லாமியா்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனா். மேலும், இந்த மண்ணில் வாழ்ந்த கோடிக்கணக்கான பூா்வகுடி மக்கள் இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டனா். ஆனால், பிரதமா் மோடி இந்தியாவில் வாழும் இஸ்லாமியா்களை அந்தியா்கள் போலவும், ஹிந்துகளின் சொத்துகளை அபகரிக்க வந்தவா்கள் போலவும் அரசியல் லாபத்துக்காக சித்தரிக்கிறாா். எனவே இஸ்லாமியா்கள் குறித்த வெறுப்பு பேச்சுக்கு பிரதமா் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com